தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி சாம்பியன்


தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி சாம்பியன்
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 10:13 PM GMT)

தேசிய சீனியர் ஆக்கி போட்டியில், தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை,

9-வது தேசிய சீனியர் ஆக்கி (‘பி’ பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. 41 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, மத்திய தலைமை செயலக அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன. இவ்விரு அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் நேற்று அரங்கேறியது. இதில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களுடன் துடிப்புடன் விளையாடினர். 12-வது நிமிடத்தில் முத்துசெல்வன் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து தமிழக அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி வந்தார். 20-வது நிமிடத்தில் தலைமை செயலக அணி வீரர் கோவிந்த் சிங் ராவத் கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து 21-வது நிமிடத்தில் தமிழக வீரர் ராயர் வினோத்தும், 34-வது நிமிடத்தில் தலைமை செயலக வீரர் கோவிந்த் சிங் ராவத்தும் கோல் போட்டனர். அடுத்து 38-வது நிமிடத்தில் தாமுவும் (தமிழகம்), 41-வது நிமிடத்தில் ஞானவேலும் (தலைமை செயலகம்) கோல் அடிக்க ஆட்டம் மறுபடியும் சமநிலையை எட்டியது.

இரு அணி வீரர்களும் முன்னிலை பெற தீவிரம் காட்டிய போது, அவ்வப்போது வாக்குவாதம், தள்ளுமுள்ளுவும் நிகழ்ந்து, ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த சூழலில் 56-வது நிமிடத்தில் தமிழக அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை வினோதன் கோலாக்கி, வெற்றிப்பாதைக்கு வித்திட்டார். இறுதி கட்டத்தில் மத்திய தலைமை செயலக அணி, தங்களது கோல் கீப்பரை வெளியேற்றி விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை இறக்கியது. கடைசி 3 நிமிடங்களில் அந்த அணி கோல் கீப்பரே இல்லாமல் விளையாடி பார்த்தும் அவர்களின் யுக்திக்கு பலன் கிடைக்கவில்லை.

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் தமிழக அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சாய் அணி 5-1 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை தோற்கடித்தது. பரிசளிப்பு விழாவில், தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் தீரஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாம்பியன் கோப்பையை வழங்கினார். விழாவில் தமிழ்நாடு ஆக்கி அமைப்பின் தலைவர் சேகர் மனோகரன், செயலாளர் ரேணுகா லட்சுமி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் பெர்னாண்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதல் இரு இடங்களை பிடித்த தமிழகமும், மத்திய தலைமை செயலக அணியும் குவாலியரில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் ‘ஏ’ டிவிசன் தேசிய சீனியர் ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story