இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங்கும் கொரோனாவால் பாதிப்பு


இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங்கும் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2020 10:30 PM GMT (Updated: 10 Aug 2020 8:13 PM GMT)

இந்திய ஆக்கி அணியின் வீரர் மன்தீப் சிங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு, 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய ஆக்கி அணிகளின் பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி மையத்தில் நடந்து வந்தது. ஊரடங்கு காரணமாக கடந்த ஜூன் மாதம் இறுதியில் சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்பட்ட இந்திய ஆக்கி அணி வீரர்கள் தேசிய பயிற்சி முகாம் மீண்டும் வருகிற 20-ந் தேதி தொடங்க இருப்பதால் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கடந்த வாரத்தில் பெங்களூரு ‘சாய்’ மையத்துக்கு வந்தனர்.

பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதில் இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் சுரேந்தர் குமார், ஜஸ்கரன்சிங், வருண்குமார், கிரிஷன் பஹதூர் பதாக் ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. அந்த 5 வீரர்களும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய ஆக்கி அணியின் மற்றொரு வீரரான மன்தீப் சிங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்து இருக்கிறது. இந்த தகவலை இந்திய விளையாட்டு ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அறிகுறி இல்லாமல் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருக்கும் மன்தீப் சிங் ‘சாய்’ வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மற்ற வீரர்களுடன் சேர்த்து அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எல்லா வீரர்களுக்கும் லேசான அறிகுறி தான் இருப்பதாகவும், அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளதாகவும் ‘சாய்’ டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஜலந்தரை சேர்ந்த 25 வயது முன்கள வீரரான மன்தீப் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6-வது இந்திய ஆக்கி வீரர் ஆவார்.

இதற்கிடையே, இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமை தொடங்குவதில் அவசரம் காட்டி இருக்கக்கூடாது என்று முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஜாபர் இக்பால் கருத்து தெரிவிக்கையில், ‘தேசிய பயிற்சி முகாமை தொடங்குவதில் இவ்வளவு அவசரம் தேவையில்லை. தற்போதைய பயிற்சி முகாமை தவிர்த்து இருக்கலாம். பயிற்சியாளர்கள், வீரர்களை வீட்டில் இருந்தவாறே உடல் தகுதியை மேம்படுத்துதவற்கான பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ப முகாம் நடத்துவது குறித்து முடிவு செய்ய வேண்டும்’ என்றார். இதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் அசோக் குமாரும், ‘தற்போதைக்கு பயிற்சி முகாம் நடத்த வேண்டிய அவசியமில்லை. இதனை ஒரு எச்சரிக்கை மணியாக நினைத்து செயல்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.


Next Story