இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்கள் கொரோனாவுக்கு பலி


இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்கள் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 9 May 2021 5:40 AM GMT (Updated: 9 May 2021 5:40 AM GMT)

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரரான ரவிந்தர் பால் சிங் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரரான ரவிந்தர் பால் சிங் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 24-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவில் இருந்து மீண்ட அவர் கடந்த வியாழக்கிழமை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அடுத்த நாளில் அவரது உடல் நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது. 62 வயதான ரவிந்தர் பால் சிங் திருமணம் செய்து கொள்ளவில்லை.

1979 முதல் 1984-ம் ஆண்டு வரை இந்திய அணியின் நடுகள வீரராக சிறப்பாக செயல்பட்ட ரவிந்தர் பால் சிங் 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார். 1984-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்சில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றார். இது தவிர 1980, 1983-ம் ஆண்டுகளில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டி, 1982-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

இதேபோல் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரரும், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான எம்.கே.கவுசிக் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவரான கவுசிக், அர்ஜூனா மற்றும் துரோணாச்சார்யா விருது பெற்றவர் ஆவார். 66 வயதான கவுசிக்குக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

ஆக்கி பிரபலங்களின் மறைவுக்கு மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் ஞானேந்திர நிங்கோம்பாம் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story