ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் பேட்டி


ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் பேட்டி
x
தினத்தந்தி 9 May 2021 11:15 PM GMT (Updated: 9 May 2021 11:15 PM GMT)

இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது.

பெங்களூரு, 

ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணி தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. ஒலிம்பிக் தொடங்குவதற்கு இன்னும் 75 நாட்களே இருக்கிறது. இதையொட்டி இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் பதக்கம் வெல்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு இருக்கிறது என்று வலுவாக நம்புகிறோம். இந்த நம்பிக்கை தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. எங்களது பயிற்சி சரியான நேரத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது. டோக்கியோவில் உள்ள வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப எங்களை தயார்படுத்திக் கொள்ள இங்கு வெயிலில் அதிக நேரம் பயிற்சி மேற்கொள்கிறோம்.

புரோ ஆக்கி லீக்கில் ஜெர்மனி, ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. ஏனெனில் இந்த ஆட்டங்கள் எங்களை தயார்படுத்திக் கொள்ள உதவிகரமாக இருந்திருக்கும். ஆனால் தற்போதைய நிலைமையில் இது போன்று நடக்கத்தான் செய்யும் என்பதை புரிந்து கொண்டுள்ளோம். இவ்வாறு மன்பிரீத் சிங் கூறினார்.

ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி 8 தங்கம் உள்பட 11 பதக்கங்களை வென்று இருக்கிறது. ஆனால் 1980-ம் ஆண்டுக்கு பிறகு பதக்கம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இ்ந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் மற்றும் சக வீராங்கனைகள் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுள்ளனர். ‘கொரோனாவில் இருந்து அனைவரும் குணமடைந்து நல்ல நிலையில் இருப்பது நிம்மதி அளிக்கிறது. மீண்டும் பயிற்சியை தொடங்க உள்ளோம். கொரோனா பாதிப்பு சற்று பின்னடைவு தான் என்றாலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் நன்றாக செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்போம். அடுத்த 75 நாட்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்’ என்று ராணி ராம்பால் குறிப்பிட்டார்.

Next Story