இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் கேஷவ் தத் மரணம்


இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் கேஷவ் தத் மரணம்
x
தினத்தந்தி 8 July 2021 4:37 AM GMT (Updated: 2021-07-08T10:07:59+05:30)

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் நடுகள வீரரான கேஷவ் தத் (95 வயது) வயது மூப்பு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். கொல்கத்தாவில் தனியாக வசித்து வந்த அவர் தனது வீட்டில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.

1948-ம் ஆண்டு லண்டனிலும், 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியிலும் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் கேஷவ் தத் அங்கம் வகித்தார். 1956-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலும் அவர் பங்கேற்க வாய்ப்பு இருந்தது. தனியார் டீ தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய அவர் விடுமுறை கிடைக்காததால் அந்த வாய்ப்பை இழக்க நேர்ந்தது. இந்திய ஆக்கி அணியின் சிறந்த நடுகள வீரராக விளங்கிய கேஷவ் தத், மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறார். மேலும் மோகன் பகான் ஆக்கி கிளப் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். லாகூரில் பிறந்த கேஷவ் தத், பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தார். அவருடைய மனைவி, 2 மகன், ஒரு மகள் ஆகியோர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். அவர்கள் பலமுறை விரும்பி அழைத்தும் தாய் நாட்டை விட்டு வரமாட்டேன் என்று கூறி அவர் இங்கு தனியாக வசித்து வந்தார்.

கேஷவ் தத் மறைவுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் குர்பாஸ் சிங் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் ஞானேந்திர நிங்கோம்பாம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘1948, 1952-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணியில் இடம் பெற்றவர்களில் எஞ்சியிருந்த ஒரே வீரரான கேஷவ் தத்தின் மறைவு மூலம் அந்த கால வரலாறு முடிவுக்கு வந்து விட்டது’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

Next Story