தென் மண்டல சப்-ஜூனியர் ஆக்கி: தமிழக அணியின் ஆட்டம் 'டிரா'


தென் மண்டல சப்-ஜூனியர் ஆக்கி: தமிழக அணியின் ஆட்டம் டிரா
x

தென் மண்டல சப்-ஜூனியர் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் நடந்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் முதலாவது தென் மண்டல சப்-ஜூனியர் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தெலுங்கானா-புதுச்சேரி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

இதேபோல் தமிழ்நாடு-கேரளா அணிகள் இடையிலான விறுவிறுப்பான ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது. தமிழக அணியில் ஸ்வாதி (4-வது நிமிடம்), பிரியதர்ஷினி (22-வது நிமிடம்) தலா ஒரு கோலும், கேரள அணியில் லட்சுமி, அபய் ஜோதி தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் ஆந்திர அணி 4-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தியது.

ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் புதுச்சேரி அணி 5-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை சாய்த்தது. இன்னொரு ஆட்டத்தில் ஆந்திரா 10-0 என்ற கோல் கணக்கில் தெலுங்கானாவை ஊதித்தள்ளியது.

தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் மோதிய திரில்லிங்கான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது. தமிழக அணியில் சுகுமார் (4-வது நிமிடம்), கவுதம் (36-வது நிமிடம்) தலா ஒரு கோலும், கர்நாடக அணியில் ஜாஷன் தம்மையா (34-வது, 55-வது நிமிடம்) 2 கோலும் அடித்தனர்.


Next Story