இந்திய வீராங்கனை மானு பாகெருக்கு இரட்டை தங்கப்பதக்கம்


இந்திய வீராங்கனை மானு பாகெருக்கு இரட்டை தங்கப்பதக்கம்
x
தினத்தந்தி 24 March 2018 11:00 PM GMT (Updated: 24 March 2018 8:36 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெர் இரட்டை தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.

சிட்னி,

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய இளம் புயல் மானு பாகெருக்கும், தாய்லாந்தின் கன்யாகோன் ஹிருன்போயமுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 24 ரவுண்ட் சுடக்கூடிய இந்த பிரிவில் ஹிருன்போயமை மயிரிழையில் முந்திய மானு பாகெர் 235.9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். ஹிருன்போயம் 234.9 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், சீனாவின் கைமன் லூ 214.2 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் மானு பாகெர், தேவன்ஷி ராணா, மஹிமா ஆகியோர் கொண்ட இந்திய குழு 1,693 புள்ளிகளை குவித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. 16 வயதான அரியானாவைச் சேர்ந்த மானு பாகெர் சமீபத்தில் சீனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இரட்டை தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது நினைவிருக்கலாம்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சீன வீரர் ஸிஹாவ் வாங் 242.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், இந்திய வீரர் கவுரவ் ராணா 233.9 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர். இதன் அணிகள் பிரிவில் கவுரவ் ராணா, அர்ஜூன் சிங், அன்மோல் ஆகியோர் கொண்ட இந்திய அணி, சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 1,718 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.

இந்த போட்டியில் சீனா 6 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலத்துடன் மொத்தம் 14 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என்று மொத்தம் 12 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

Next Story