இளம் வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற சென்னை மாணவருக்கு உற்சாக வரவேற்பு


இளம் வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற சென்னை மாணவருக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 26 Jun 2018 10:00 PM GMT (Updated: 26 Jun 2018 8:39 PM GMT)

இளம் வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற சென்னை மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை முகப்பேரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவரான பிரக்ஞானந்தா, இத்தாலியில் நடந்த கிரெடின் ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 2-வது இடம் பிடித்ததுடன், செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்று சாதனை படைத்தார். பிரக்ஞானந்தாவின் வயது 12 ஆண்டு 10 மாதங்கள் ஆகும். இதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர், ஒட்டுமொத்தத்தில் 2-வது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். செஸ் போட்டியில் இளம் வயதிலேயே புதிய உச்சத்தை தொட்ட பிரக்ஞானந்தா நேற்று சென்னை திரும்பினார்.

அவருக்கு பள்ளி மற்றும் உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரக்ஞானந்தா நிருபர்களிடம் பேசுகையில், ‘இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் எனது முன்மாதிரி. அவருடன் செஸ் விளையாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். நடப்பு உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) போன்று வருவது தான் எனது லட்சியமாகும்’ என்று தெரிவித்தார்.

Next Story