உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அங்குர் மிட்டல் தங்கம் வென்றார்


உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அங்குர் மிட்டல் தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 8 Sep 2018 10:30 PM GMT (Updated: 8 Sep 2018 7:46 PM GMT)

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் தங்கம் வென்றார்.

சாங்வான்,

52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘டபுள் டிராப்’ பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் மிட்டல், சீன வீரர் யியாங் யங், சுலோவக்கியா வீரர் ஹூபெர்ட் ஆந்ரேஜ் ஆகியோர் 150-க்கு 140 புள்ளிகள் குவித்து சமநிலை வகித்தனர். மூவருக்கும் இடையே நடந்த ஷூட்-அவுட் முடிவில் அரியானாவைச் சேர்ந்த 26 வயதான அங்குர் மிட்டல் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். சீன வீரர் யியாங் யங் வெள்ளிப்பதக்கமும், சுலோவக்கியா வீரர் ஹூபெர்ட் ஆந்ரேஜ் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

இதன் அணிகள் பிரிவில் அங்குர் மிட்டல், முகமது அசாப், ஷர்துல் விஹான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 409 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றது. இத்தாலி அணி 411 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், சீனா அணி 410 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றன. இந்த போட்டி தொடரில் இந்தியா இதுவரை 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் 3-வது இடம் வகிக்கிறது.

Next Story