பிற விளையாட்டு

‘வலுவான’ வெற்றி! + "||" + Strong success

‘வலுவான’ வெற்றி!

‘வலுவான’ வெற்றி!
சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது சாதாரண விஷயமல்ல. ஆனால், புதுச்சேரி வலு தூக்கும் வீராங்கனை ஆஷிகா, உலகளவில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தங்கப் பதக்கங்களை வென்று வந்திருக்கிறார்.
அசாதாரண சாதனை புரிந்த ஆஷிகாவின் பேட்டி...

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...

நான் புதுச்சேரி ஐயங்குட்டிபாளையத்தில் பெற்றோர், அண்ணனுடன் வசிக்கிறேன். முத்து ரெத்தினா அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறேன். அப்பா ஆறுமுகம், உழவர்கரை நகராட்சி ஆணையரின் ஓட்டுநராக உள்ளார், அம்மா சீதா அங்கன்வாடி ஆசிரியை. அண்ணன் பிரவீண்குமார் 12-ம் வகுப்பு படிக்கிறார்.

உடல் வலிமைக்குச் சவால்விடும் வலுதூக்குதல், பெண்களைப் பெரிதாக ஈர்க்காத விளையாட்டு. இதற்கு எப்படி வந்தீர்கள்?

அதற்கு, நான் வளர்ந்த விதம்தான் காரணம். எங்கப்பா ஒரு கராத்தே மாஸ்டர், வலு தூக்கும் வீரரும் கூட. வீட்டிலேயே ‘ஜிம்’ அமைத்து பயிற்சியில் ஈடுபடுவ துடன், பலருக்கும் கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். அவரது பயிற்சியில் நான் கராத்தேயில் ‘கிரீன் பெல்ட்’ பெற்றேன். குத்துச்சண் டையும் கற்றேன். இப்படி நான் உடம்பை வலு வாக்கி வந்தேன். இந்நி லையில், வலு தூக்குதல் பக்கம் என் கவனம் திரும் பியது.

வலு தூக்குதலில் ஈடுபடும்படி அப்பா கூறினாரா அல்லது நீங்கள் ஆர்வம் காட்டினீர்களா?

நானேதான் இதில் ஆர்வம் காட்டினேன். அதை அப்பாவிடம் கூறியதும், தனது நண்பரும், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற வலு தூக்குதல் வீரருமான பாக்யராஜிடம் பயிற்சிக்குச் சேர்த்துவிட்டார். அவரது பயிற்சியில் நான் சுமார் ஓராண்டு காலத்திலேயே போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்குத் தயாராகிவிட்டேன்.

நீங்கள் வென்ற முதல் முக்கியப் போட்டி பற்றிக் கூறுங்கள்...

நான் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதுடன், ‘புதுச்சேரியின் வலுவான பெண்’ என்ற பட்டத்தையும் பெற்றேன். தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடைபெற்ற தேசிய வலு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக் கத்தைச் சொந்தமாக் கினேன், ‘இந்தியாவின் வலுவான பெண்’ என்ற பட்டமும் கிடைத்தது.

சர்வதேசப் போட்டியில் பங் கேற்கும் வாய்ப்பு எப்படிக் கிட்டியது?

நான் தேசியப் போட்டியில் வென்றதன் வாயிலாக, மும்பையில் நடைபெற்ற சப்-ஜூனியர், ஜூனியர் பிரிவினருக்கான தேசிய முகாமில் பங்கேற்கும் வாய் ப்புக் கிடைத்தது. அதில், நான் உள்பட நாடு முழுவதிலும் இரு ந்து 14 வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்றோம். தொடர்ந்து, தென்ஆப்பிரிக்கா போட் செப்ட்ஸ்டுரூமில் நடைபெற்ற உலக ஜூனியர், சப்-ஜூனியர் வலு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு நாங்கள் அனை வரும் அனுப்பப்பட்டோம்.தென்ஆப்பிரிக்க போட்டி பற்றிச் சொல்லுங்கள்...

தென்ஆப்பிரிக்காவில் இம்மாத துவக்கத்தில் நடைபெற்ற போட்டியில் ஜெர்மனி, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஈகுவடார் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றார்கள். இந்தப் போட்டிக்கு மிகவும் நம்பிக்கையுடன் தயாராகியிருந்த நான், அதே தெம்புடன் போட்டிகளில் பங்கேற்றேன். சப்-ஜூனி யர் 43 கிலோ எடைக்கு உட்பட்டோரில், ஸ்குவாட், பெஞ்ச், டெட் என்று மூன்று பிரிவுகளிலும் தங்கம் தட்டி வந்தேன்.

நீங்கள் கலந்துகொண்ட முதல் சர்வதேசப் போட்டி இது. முதல் போட்டியிலேயே பதக்கம் வெல்லும் நம்பிக்கை இருந்ததா?

இருந்தது. அந்த நம்பிக்கைதான் என்னை பிற நாட்டு வீராங்கனைகளின் சவாலை முறியடித்து தங்கப் பதக்கம் வெல்ல வைத்தது. வெளிநாட்டுப் போட்டிக்கு நான் தேர்வு பெற்றாலும், அதற்கான செலவை நாங்களே ஏற்க வேண்டியிருந்தது. அந்நிலையில், வாசு என்கிற தொழிலதிபர் ரூ. 1 லட்சம் கொடுத்து உதவினார். அது தவிர, எங்கப்பா ரூ. 3 லட்சம் கடன் வாங்கி என்னை அனுப்பிவைத்தார். இப்படி கஷ்டப்பட்டு நம்மை போட்டிக்கு அனுப்பியிருக்கிறார்களே என்ற எண்ணமும் நான் சிறப்பாகச் செயல்பட தூண்டுதலானது.

இந்த வெற்றி உங்களைப் பொறுத்தவரை எவ்வளவு முக்கியமானது?

சர்வதேச வலு தூக்கும் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் 40 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு என்னால் தங்கப் பதக்கம் கிட்டியிருக்கிறது என்று சொன்னார்கள். அது மிகவும் பெருமையாக இருந்தது. தனிப்பட்ட முறையில் எனக்கும், தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் சாதிக்கும் தைரியத்தை இந்த வெற்றி தந்திருக்கிறது.

இந்த வெற்றியால் உங்களுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்?

தென்ஆப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய எனக்கு, சென்னை விமான நிலையத்தில் குடும்பத்தினரும், நண்பர் களும் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். புதுச்சேரியிலும் என்னை மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். எங்கள் பள்ளியில் பாராட்டு விழா நடத்தி, ரூ. 5 ஆயிரம் பரிசளித்தார்கள். வெற்றி, பாராட்டு மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், எனக்காக எங்கப்பா பெற்ற கடனை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

உங்களைப் போல உங்கள் அண்ணனும் விளையாட்டில் ஆர்வமுள்ளவரா?

ஆமாம், அவரும் என்னைப் போல ஒரு வலு தூக்கும் வீரர். வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிற தேசிய பள்ளி விளையாட்டுகள் சம்மேளனப் போட்டியில் சாதிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார், நிச்சயம் சாதிப்பார்.

தினமும் எவ்வளவு நேரம் பயிற்சி செய்கிறீர்கள்?

நான் தினமும் 2 மணி நேரம் பயிற்சி செய்கிறேன். வலு தூக்குதல் பயிற்சி தவிர, ஓட்டம், பிற உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுகிறேன். மனதை வலுப்படுத்த தியானமும் செய்கிறேன்.

படிப்பில் நீங்கள் எப்படி?

நான் விளையாட்டில் ஆர்வமாக இருந்தாலும், படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன். எனவே படிப்பில் சிறந்த மாணவியாகவே திகழ்கிறேன்.

வலு தூக்குதலில் உங்கள் உயர்வுக்கு யாரெல்லாம் காரணம் என்று கூறுவீர்கள்?

முதலில் எனது பெற்றோர். அவர்களின் ஆதரவு இல்லாமல் நான் சர்வதேச அளவுக்கு உயர்வதை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. அப்புறம், எனக்கு ஆரம்பத்தில் பயிற்சி அளித்த பாக்யராஜ், தற்போதைய பயிற்சியாளரும் புதுச்சேரி வலு தூக்குதல் சங்கச் செயலாளருமான பிரவீண்குமார் ஆகியோரும், என்னுடன் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெறும் அண்ணன்களும் நான் வலு தூக்குதலில் வலுவான வீராங்கனையாக உதவியிருக்கிறார்கள்.

உங்களின் எதிர்கால இலக்கு?

இந்தியாவுக்காக காமன்வெல்த் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று கொடுக்க விரும்புகிறேன். ஆனால் எங்கப்பாவால் தொடர்ந்து கடன் பெற்று என்னை போட்டிகளுக்கு அனுப்ப முடியாது. எனவே, அரசு அல்லது தனியார் ஸ்பான்சரின் உதவியை எதிர்பார்க்கிறேன்.

ஆஷிகாவின் ஆதங்கம், ஆனந்தமாக மாறட்டும்!

ஆசிரியரின் தேர்வுகள்...