துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 11 Dec 2018 9:30 PM GMT (Updated: 11 Dec 2018 7:13 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது.


* இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நேற்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினர். இந்திய வீரர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளத்தின் வழியாகவும் வாழ்த்துகள் குவிந்தன.

* உலக குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறையாக தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த மேரிகோமுக்கு மணிப்பூர் மாநில அரசு சார்பில் இம்பால் நகரில் நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவில் அவருக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அவரை கவுரவிக்கும் வகையில் அங்குள்ள ஒரு சாலைக்கு மேரிகோம் என்று பெயர் சூட்டப்பட்டது.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் புனேயில் நேற்றிரவு அரங்கேறிய 54-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்- டெல்லி டைனமோஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

* 6-வது புரோ கபடி லீக் போட்டியில் விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடந்த 106-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் யு மும்பா அணி 44-19 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை தோற்கடித்து 15-வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 27-20 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வென்றது. இன்றைய ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்- பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

* இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் உள்ள மவுன்ட்மாங்கானுவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய ‘ஏ’ அணி 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அன்மோல்பிரீத் சிங் 71 ரன்னும், அங்கித் பாவ்னே 48 ரன்னும், விஜய்சங்கர் 42 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி 44.2 ஓவர்களில் 200 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய ‘ஏ’ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்திய ‘ஏ’ அணி தரப்பில் சித்தார்த் கவுல் 4 விக்கெட்டும், கிருஷ்ணப்பா கவுதம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

* வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் சேர்த்தது. தமிம் இக்பால் (50 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (62 ரன்), ஷகிப் அல்-ஹசன் (65 ரன்)ஆகியோர் அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. தனது 3-வது சதத்தை எட்டிய ஷாய் ஹோப் 146 ரன்கள் (144 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. கடைசி ஆட்டம் நாளை மறுதினம் நடக்கிறது.



Next Story