துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 4 Feb 2019 10:00 PM GMT (Updated: 4 Feb 2019 9:21 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


* ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் காதிர் 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு அதிகமாக காரை ஓட்டி போலீசாரிடம் சிக்கி உள்ளார். மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வாகனம் ஒட்டினால் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன், 7 தகுதி இழப்பு புள்ளியும் அளிக்கப்படும். ஒருவர் 12 தகுதி இழப்பு புள்ளி பெற்றால் அவருடைய லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. உஸ்மான் காதிர், பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிரின் மகன் ஆவார். உஸ்மான் காதிரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் போக்குவரத்து விதிமுறையை கடைப்பிடிப்பதில் வீரர்கள் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

* ஆன்டிகுவாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பார்படோசில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 9-ந் தேதி செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியில் பந்து வீச வெஸ்ட்இண்டீஸ் அணி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாக எழுந்த புகாரை விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜாசன் ஹோல்டருக்கு இந்த தடையை விதித்து இருக்கிறது. அவருக்கு பதிலாக 20 வயதான ஆல்-ரவுண்டர் கீமோ பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பிராத்வெயிட் வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் ஐதராபாத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த ஆண்டு நடைபெறும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நமது வீரர்களில் ஒருவர் பட்டம் வெல்வார் என்று நான் நம்புகிறேன். சாய்னா நேவால், சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர் கடந்த 18 வருடங்களாக நமக்கு கிடைக்காமல் இருக்கும் ஆல் இங்கிலாந்து பட்டத்தை வென்று தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்தார். ஆல் இங்கிலாந்து பட்டத்தை இந்திய வீரர்கள் பிரகாஷ் படுகோனே 1980-ம் ஆண்டிலும், கோபிசந்த் 2001-ம் ஆண்டிலும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் முதுகு பகுதியில் காயம் அடைந்ததால் வெலிங்டனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. அவரது காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் நாளை தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மார்ட்டின் கப்தில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மார்ட்டின் கப்தில் ஆடாததால் விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட், காலின் முன்ரோவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story