துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 12 March 2019 10:26 PM GMT (Updated: 12 March 2019 10:26 PM GMT)

இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.


* இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. முதல் 3 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கவுதம் கம்பீர், ஷேவாக் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவிக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் புல்வாமாவில் இந்திய ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் காரணமாக ஏற்கனவே ஐ.பி.எல். தொடக்க விழாவை இந்திய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்த நிலையில் தாங்களும் இந்த பாராட்டு விழாவை கைவிட்டு உள்ளதாக டெல்லி கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

* 1962-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியில் இடம் பெற்றவரும், பல்வேறு கிளப் அணிகளின் பயிற்சியாளர் பொறுப்பை வகித்தவருமான பிரேசிலை சேர்ந்த முன்னாள் முன்கள வீரரான காட்டினோ (வயது 75) உடல் நலக்குறைவு காரணமாக ரியோடிஜெனீரோவில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். காட்டினோ பிரேசில் அணிக்காக 15 போட்டிகளில் ஆடி 9 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் சான்டோஸ் கிளப் அணிக்காக 457 போட்டியில் விளையாடி 370 கோல்கள் அடித்துள்ளார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த ஒரு பேட்டியில், ‘பந்தை சேதப்படுத்தியதால் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பும் போது சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். பந்தை சேதப்படுத்திய சர்ச்சை குறித்து நிச்சயம் நீண்ட காலம் பேசுவார்கள். அதேபோல் பொதுஇடங்களில் செல்லும் போது மக்கள் கூட கிண்டல் செய்யலாம். இதனை அவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

* ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டிக்கான பிளே-ஆப் தகுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- கொழும்பு எப்.சி. (இலங்கை) அணிகள் ஆமதாபாத்தில் இன்று (இரவு 7.30 மணி) மோதுகின்றன. ஏற்கனவே நடந்த முதலாவது ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனதால், இதில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.


Next Story