குடிநீர் வீணடிப்பு: விராட்கோலிக்கு ரூ.500 அபராதம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


குடிநீர் வீணடிப்பு: விராட்கோலிக்கு ரூ.500 அபராதம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2019 11:12 PM GMT (Updated: 8 Jun 2019 11:12 PM GMT)

குடிநீர் வீணடிப்பு செய்ததற்காக, விராட்கோலிக்கு ரூ.500 அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


* இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலியின் வீடு டெல்லி-அரியானா எல்லைப்பகுதியில் உள்ள குர்கிராமில் உள்ளது. அவருக்கு சொந்தமான கார்கள் அந்த வீட்டில் உள்ளன. வீட்டு ஊழியர்கள் விராட்கோலியின் காரை கழுவுவதற்கு குடிநீரை பயன்படுத்தி உள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வந்த புகாரின் பேரில் ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள் விராட்கோலிக்கு ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

* 47-வது கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டி தாய்லாந்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் அனிருத் தபா வெற்றிக்கான கோலை அடித்தார்.

* “ தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்சுக்கு தேசிய அணியை விட பணம் தான் முக்கியமாக போய் விட்டது. அதனால் தான் அவர் ஓய்வு பெற்று விட்டு ஐ.பி.எல். மற்றும் பாகிஸ்தான் லீக் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகிறார். டிவில்லியர்ஸ் தன்னுடைய சேவை நாட்டுக்கு தேவை என்பதை உணர்ந்து இருக்க வேண்டும். பணம் இன்று வரும் நாளை போகும். பணம் சம்பாதிப்பதற்காக உலக கோப்பை வாய்ப்பையே புறந்தள்ளி விட்டார் ” என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சாடியுள்ளார்.

* ஒடிசாவில் நடந்து வரும் உலக ஆக்கி தொடர் இறுதி சுற்றில் நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் அமெரிக்கா 9-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவையும், ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும் தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றன.

* 24 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை பந்தாடியது.


Next Story