பிற விளையாட்டு

தமிழக வீரர் பாஸ்கரன் அர்ஜூனா விருது பெற்றார்: தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கினார் + "||" + Tamil Nadu player Baskaran has received the Arjuna Award: Deepara Malik awarded Kelrathna Award - Presented by the President

தமிழக வீரர் பாஸ்கரன் அர்ஜூனா விருது பெற்றார்: தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கினார்

தமிழக வீரர் பாஸ்கரன் அர்ஜூனா விருது பெற்றார்: தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கினார்
தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருதையும், தமிழக பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன், கபடி வீரர் அஜய் தாகூர் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருதையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
புதுடெல்லி,

டெல்லியில் நடந்த விழா வில் மாற்றுத் திறனாளி வீராங்கனை தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருதையும், தமிழக பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன், கபடி வீரர் அஜய் தாகூர் உள்ளிட்டோருக்கு அர்ஜூனா விருதையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.


விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியலை ஓய்வு பெற்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைமையிலான கமிட்டி தேர்வு செய்து சமீபத்தில் அறிவித்தது. இதன்படி விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதுக்கு இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ மல்யுத்த வீரரும், ஆசிய, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான பஜ்ரங் பூனியா, ரியோ பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

அர்ஜூனா விருது பெறுவோர் பட்டியலில் தஜிந்தர் பால் சிங் தூர் (தடகளம்), முகமது அனாஸ் (தடகளம்), எஸ்.பாஸ்கரன் (பாடி பில்டிங்), சோனியா லாதர் (குத்துச்சண்டை), ரவீந்திர ஜடேஜா (கிரிக்கெட்), சிங்லென்சனா சிங் (ஆக்கி), அஜய் தாகூர் (கபடி), கவுரவ் சிங் கில் (கார்பந்தயம்), பிரமோத் பாகத் (மாற்றுத்திறனாளி பேட்மிண்டன்), அஞ்சும் மோட்ஜில் (துப்பாக்கி சுடுதல்), ஹர்மீத் ரஜூல் தேசாய் (டேபிள் டென்னிஸ்), பூஜா தன்டா (மல்யுத்தம்), பவாட் மிர்சா (குதிரையேற்றம்), குர்பிரீத்சிங் சந்து (கால்பந்து), பூனம் யாதவ் (கிரிக்கெட்), ஸ்வப்னா பர்மன் (தடகளம்), சுந்தர் சிங் குர்ஜர் (மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம்), சாய் பிரனீத் (பேட்மிண்டன்), சிம்ரன் சிங் ஷெர்ஜில் (போலோ) ஆகிய 19 பேர் இடம் பெற்றனர். இதில் பாடி பில்டிங் (உடற்கட்டு திறன்) வீரர் எஸ்.பாஸ்கரன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.

இது தவிர சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதுக்கு விமல்குமார் (பேட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொகிந்தர் சிங் தில்லான் (தடகளம்), சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு மெஸ்பான் பட்டேல் (ஆக்கி), ராம்பிர் சிங் கோகர் (கபடி), சஞ்சய் பரத்வாஜ் (கிரிக்கெட்), வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதுக்கு மானுல் பிரெட்ரிக்ஸ் (ஆக்கி), ஆருப் பசாக் (டேபிள் டென்னிஸ்), மனோஜ்குமார் (மல்யுத்தம்), நிட்டேன் கிர்டான் (டென்னிஸ்), லால்ரெம்சங்கா (வில்வித்தை) ஆகியோரும் தேர்வானார்கள்.

தேசிய விளையாட்டு தினமான நேற்றைய தினம் விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். தீபா மாலிக், இடுப்புக்கு கீழே உறுப்புகள் செயலிழந்தவர். இதனால் வீல்சேர் உதவியுடன் விழாவிற்கு வந்திருந்த தீபா மாலிக் கேல்ரத்னா விருதை நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். 49 வயதான தீபா மாலிக், இந்த விருதை அதிக வயதில் பெறும் நபர் ஆவார். விருதுடன் பாராட்டு பட்டயமும், ரூ.7½ லட்சம் ஊக்கத்தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியையொட்டி பஜ்ரங் பூனியா ரஷியாவில் பயிற்சி மேற்கொண்டு வருவதால் விருது விழாவில் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. அவருக்கு வேறு நாளில் விருது அளிக்கப்படும்.

தமிழக பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன், தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர் உள்ளிட்டோர் அர்ஜூனா விருதை பெற்றனர். இந்த விருதுக்கு தேர்வானவர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, குண்டு எறிதலில் ஆசிய சாம்பியனான தஜிந்தர் பால் சிங், ஓட்டப்பந்தய வீரர் முகமது அனாஸ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் ஆகியோர் விழாவுக்கு வரவில்லை. இதில் ஜடேஜா, வெஸ்ட் இண்டீசில் விளையாடிக் கொண்டிருக்கிறார். மற்ற 3 பேரும் இதே போல் தற்போது போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அர்ஜூனா மற்றும் துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகளுக்கு பாராட்டு பட்டயத்துடன் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.