பிற விளையாட்டு

கோடிகளை குவிக்கும் சிந்து + "||" + Accumulating crores Sindhu

கோடிகளை குவிக்கும் சிந்து

கோடிகளை குவிக்கும் சிந்து
பேட்மிண்டன் விளையாட்டில் சிந்து பெற்ற வெற்றிகள்தான் அவர் இந்த அளவுக்கு உயர்ந்த சம்பளம் வாங்குவதற்கான காரணம்
பேட்மிண்டன் உலக நாயகியான பி.வி.சிந்து, விளம்பர படங்களில் தோன்று வதற்காக அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனைகள் பட்டியலிலும் முன்னணி இடத்தில்தான் இருக்கிறார். அவர் பிரபலமான பிராண்டுகளில் நடிக்க ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். 24 வயதான இவர், 2017-ம் ஆண்டைய நில வரப்படி விளம்பரத்தில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டுத்துறையினர் பட்டியலில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளார்.

பேட்மிண்டன் விளையாட்டில் சிந்து பெற்ற வெற்றிகள்தான் அவர் இந்த அளவுக்கு உயர்ந்த சம்பளம் வாங்குவதற்கான காரணம். விளையாட்டில் உலக அளவில் ஆறாவது இடத்தில் அவர் இருக்கிறார். இதுவரை 312 வெற்றிகளை குவித்திருக்கிறார். தோல்வி களின் எண்ணிக்கை 130 மட்டும். உலக சாம்பியன் பதக்கம் உள்பட 15 சர்வதேச பதக்கங்களையும், 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் பெற்றார்.

இவரது தந்தை வெங்கடரமணாவும், தாயார் விஜயாவும் கைப்பந்து விளையாட்டு சாதனையாளர்கள். சகோதரி டாக்டர் திவ்யாவுக்கு திருமணமாகிவிட்டது. திவ்யாவின் கணவர் ஸ்ரீராம். அவர்களுக்கு ஆர்யன் என்ற குழந்தை உள்ளது.

சிந்துவுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது என்பது பற்றி அவரது தந்தை வெங்கடரமணா சொல்கிறார்:

“சிந்துவுக்கு அப்போது எட்டு வயது. அவள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாள். அவளை அழைத்துக்கொண்டு நானும், விஜயாவும் கைப்பந்து பயிற்சிக்காக மைதானத்திற்கு செல்வோம். அதன் அருகில் ஒரு பேட்மிண்டன் கோர்ட்டும் இருந்தது. நாங்கள் கைப்பந்து பயிற்சிபெறும்போது அவள் அங்கு போய் பேட்மிண்டன் விளையாடுவாள். அப்போதுதான் அவளுக்கு அந்த விளையாட்டில் ஆர்வம் வந்தது.

பத்து வயதிலே அவளைவிட மூத்த வீரர்களோடு விளையாடினாள். அவர்கள் பயிற்சியின்போது 20 ரவுண்ட் ஓடு கிறார்கள் என்றால், சிறுமியான அவளும் அதுபோல் ஓடுவாள். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் அவளிடம் இருந்தது. அதனால் நாங்களும் அவள் மீது முழுநம்பிக்கைவைத்தோம். முறைப்படுத்தப்பட்ட பயிற்சியை பெறுவதற்காக கோபிசந்திடம் கொண்டுபோய் சேர்த்தோம். அப்போது அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து அவள் பயிற்சி பெறுவாள். இப்போது காலை ஐந்தே முக்கால் மணிக்கு பயிற்சிக்கு போனால் போதும்.

காலை ஆறு முதல் ஒன்பதரை மணி வரை கோபிசந்த் மையத்தில் பேட்மிண்டன் பயிற்சி. பின்பு ஜிம்மில் உடற் பயிற்சி. ஒன்றரை மணி வரை அது தொடரும். மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்தால், மீண்டும் நான்கு மணிக்கு கோபிசந்த் மையத்திற்கு செல்லவேண்டும். அங்கு இரவு ஏழரை மணிவரை பயிற்சி தொடரும். பின்பு வீட்டிற்கு வந்து சில வகை மசாஜ்களை செய்துவிட்டு தூங்குவார்.

சிந்துவின் அக்காள் திவ்யாவுக்கு கையுந்து பந்து விளையாட்டில் அதிக ஆர்வம். அதில் தேசிய அளவில் விளையாடியிருக்கிறார். ஆனால் படிப்பு ஆர்வத்தில் டாக்டராகிவிட்டார். திருமணமாகி கணவரோடு வசித்து வருகிறார். அவர்களது மகன் ஆர்யனுடன் பொழுது போக்குவது சிந்துவுக்கு ரொம்ப பிடிக்கும்.

சிந்துவுக்கு பத்து வயதாக இருந்தபோது அவளது விளையாட்டுத் திறமையை நாங்கள் உணர்ந்தோம். அப்போது தினமும் 120 கி.மீ. பயணம் செய்து கோபிசந்த் மையத்திற்கு செல்வோம். அப்போதெல்லாம் ஒருநாள்கூட அவள் சோம்பல் அடைந்ததில்லை. அதனால் அவள் சாதனை படைப்பாள் என்று அன்றே நாங்கள் முடிவுசெய்துவிட்டோம். அவள் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தை. அவளது வெற்றிகளில் கடவுள் அனுக்கிரகமும் உண்டு” என்கிறார், அவர்.