புரோ கபடி போட்டி: இறுதிப்போட்டியில் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ்


புரோ கபடி போட்டி: இறுதிப்போட்டியில் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ்
x
தினத்தந்தி 16 Oct 2019 11:00 PM GMT (Updated: 16 Oct 2019 8:37 PM GMT)

புரோ கபடியில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

ஆமதாபாத், 

7-வது புரோ கபடி லீக் திருவிழாவில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்து நேரடியாக தகுதி பெற்ற தபாங் டெல்லி அணி, ‘பிளே-ஆப்’ சுற்று மூலம் முன்னேறிய நடப்பு சாம்பியனான பெங்களூரு புல்சை எதிர்கொண்டது.

முதல் பாதியில் தொடக்கம் முதலே டெல்லி அணி, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் பவான் செரவாத்தின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அவரை ‘டேக்கிள்’ செய்வதில் தீவிரம் காட்டினார்கள். இதனால் வழக்கமாக எதிரணி வீரர்களை விரட்டி அடித்து புள்ளி திரட்டும் பவான் செராவத் போனஸ் புள்ளி எடுப்பதில் கவனம் செலுத்தினார். இருப்பினும் தங்களது அபார ஆட்டத்தால் டெல்லி அணி, பெங்களூரு அணியை 2 முறை ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தியது. முதல் பாதியில் டெல்லி அணி 26-18 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

பின் பாதியிலும் பவான் செராவத் ஆட்டம் பெரிதாக எடுபடவில்லை. டெல்லி அணி மீண்டும் ஒரு முறை பெங்களூரு புல்சை ‘ஆல்-அவுட்’ செய்தது. முடிவில் டெல்லி அணி 44-38 என்ற புள்ளி கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டெல்லி அணியில் நவீன்குமார் ரைடு மூலம் 15 புள்ளியும், சந்திரன் ரஞ்சித் 9 புள்ளியும் எடுத்தனர். பெங்களூரு அணியில் பவான் செராவத் 18 புள்ளிகள் சேர்த்தும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

இதைத் தொடர்ந்து நடந்த 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி (யூ மும்பா), பெங்கால் வாரியர்சை எதிர்கொண்டது. கடைசி வினாடி வரை திரிலிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 37-35 என்ற புள்ளி கணக்கில் மும்பையை தோற்கடித்து முதல் முறையாக இறுதிசுற்றை எட்டியது. பெங்கால் அணியில் அதிகபட்சமாக சுகேஷ் ஹெக்டே 8 புள்ளிகள் எடுத்தார்.

நாளை மறுதினம் (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு இதே மைதானத்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் முதல் மகுடத்துக்காக மோத உள்ளன.

Next Story