டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து அதிர்ச்சி தோல்வி


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 17 Oct 2019 10:03 PM GMT (Updated: 17 Oct 2019 10:03 PM GMT)

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஒடென்சி,

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனும், தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளவருமான இந்தியாவின் பி.வி.சிந்து, 19-ம் நிலை வீராங்கனையான அன் செ யங்கை (தென்கொரியா) எதிர்கொண்டார். இதில் சிந்துவின் ஆதிக்கமே மேலோங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு நேர்மாறாக அன்செ யங் மிரட்டினார். முதல் செட்டை பறிகொடுத்த சிந்து 2-வது செட்டில் 16-14 என்று முன்னிலை வகித்த போதிலும் கடைசி கட்டத்தில் சறுக்கினார்.

40 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 14-21, 17-21 என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார். கால்இறுதிக்குள் நுழைந்த அன் செ யங் அடுத்து ஒலிம்பிக் சாம்பியன் கரோலின் மரினை (ஸ்பெயின்) சந்திக்கிறார்.

கடந்த ஆகஸ்டு மாதம் உலக சாம்பியன் மகுடம் சூடிய பிறகு சிந்து தொடர்ச்சியாக 3 தொடர்களில் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீன ஓபன், கொரிய ஓபனிலும் அவர் 2-வது சுற்றை தாண்டவில்லை.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத், ‘நம்பர் ஒன்’ வீரரும், இரட்டை உலக சாம்பியனுமான கென்டோ மோமோட்டாவுடன் (ஜப்பான்) மோதினார். இதில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய மோமோட்டா 21-6, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெறும் 33 நிமிடங்களில் சாய் பிரனீத்தை வெளியேற்றினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 12-21, 10-21 என்ற நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கிடம் (சீனா) வீழ்ந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை 16-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஹான் செங் காய்- ஜோவ் ஹாவ் டாங் ஜோடியிடம் பணிந்தது. இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Next Story