மாநில கபடி போட்டி: திருவள்ளூர், ஐ.சி.எப். அணிகள் ‘சாம்பியன்’


மாநில கபடி போட்டி: திருவள்ளூர், ஐ.சி.எப். அணிகள் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 14 March 2020 12:21 AM GMT (Updated: 14 March 2020 12:21 AM GMT)

வீரன் அழகு முத்துக்கோன் நினைவு மாநில அளவிலான கபடி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது.

சென்னை,

நேற்று நடந்த பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பி.டி.கே. (திருவள்ளூர்)-வி.எம்.பிரதர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பி.டி.கே.அணி 29-24 என்ற புள்ளி கணக்கில் வி.எம்.பிரதர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கபடி ஸ்டார் அணி 3-வது இடத்தையும், சென்னை குயின்ஸ் அணி 4-வது இடத்தையும் பெற்றன. ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் ஐ.சி.எப். அணி 37-16 என்ற புள்ளி கணக்கில் சென்னை மாநகர போலீஸ் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. ஜெய் பவானி, ஜாலி பிரண்ட்ஸ் அணிகள் கூட்டாக 3-வது இடத்தை பிடித்தன. பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் எத்திராஜ், ஒருங்கிணைப்பாளர் கோபி, நெல்லை பிரண்ட்ஸ் கிளப் செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.12,500-ம், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.20 ஆயிரமும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.15 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரமும், 4-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.5 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது.

Next Story