நான் திரும்ப வருகிறேன் - பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சூசக தகவல்


நான் திரும்ப வருகிறேன் - பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சூசக தகவல்
x
தினத்தந்தி 12 May 2020 8:04 AM GMT (Updated: 12 May 2020 8:04 AM GMT)

பிரபல குத்துச்சண்டை வீரர் நான் திரும்ப வருவேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன்,

முன்னாள் குத்து சண்டை வீரரான மைக் டைசனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டைசன், குத்துச்சண்டையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். 20 வயதில் ஹெவிவெயிட் சாம்பியனாகி, உலக சாதனை படைத்தார். 

களத்தில் இவரைக் கண்டு அஞ்சாத எதிரிகளே இல்லை. இவரை ரோல் மாடலாக கொண்டு குத்து சண்டையில் இந்திய வீரர்கள் பலர் கலக்கி வருகின்றனர். பார்வையிலியே எதிரிகளுக்கு பயத்தை உருவாக்கும் அசாத்திய வீரர் டைசன் என்றால் மிகையல்ல. மைக் டைசன் ஓய்வு பெற்று 14 ஆண்டுகள் ஆகிறது. தற்போது 53 வயது ஆகும் மைக் டைசன், தளர்ந்து போய் இருப்பார் என நினைத்தால், நாம் ஏமாந்து விடுவோம். அந்தளவிற்கு மின்னல் வேகத்தில் இருக்கிறார் மைக் டைசன்.

இந்தநிலையில்,  ஒரே ஒரு இன்ஸ்டகிராம் பதிவின் மூலம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விடியோவில், மீண்டும் கடுமையாகப் பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. புத்திசாலித்தனமாகப் பயிற்சி எடுங்கள் என்று சொல்லும் டைசன், வீடியோ முடிவில் நான் திரும்ப வருவேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்முறை ஆட்டங்களில் மைக் டைசன் களமிறங்கினால் நியூஸிலாந்தின் பில் வில்லியம்ஸ், ஆஸ்திரேலியாவின் பால் கெல்லன் போன்றோர் அவருக்குக் கடும் சவாலை அளிப்பார்கள் என்றே தோன்றுகிறது.

மைக் டைசன் 2000வது ஆண்டில் லூ சாவரீஸ் என்ற வீரரை வெறும் 38 வினாடிகளில் வீழ்த்தியது நினைவில் இருக்கலாம். மைக் டைசன் சுமார் 44 நாக் அவுட் வெற்றிகள் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story