‘அஞ்சும் மோட்ஜிலுக்கு கேல்ரத்னா; இளவேனிலுக்கு அர்ஜூனா’ - ரைபிள் சங்கம் பரிந்துரை


‘அஞ்சும் மோட்ஜிலுக்கு கேல்ரத்னா; இளவேனிலுக்கு அர்ஜூனா’ - ரைபிள் சங்கம் பரிந்துரை
x
தினத்தந்தி 14 May 2020 11:15 PM GMT (Updated: 14 May 2020 7:18 PM GMT)

துப்பாக்கி சுடுதல் வீராங் கனை அஞ்சும் மோட்ஜிலுக்கு கேல்ரத்னா விருதும், தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜூனா விருதும் வழங்கும்படி தேசிய ரைபிள் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி, 

அஞ்சும் மோட்ஜில்

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர் களை பரிந்துரை செய்து தேசிய விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வருகின்றன.

அந்த வகையில் தேசிய ரைபிள் சங்கம், கேல்ரத்னா விருதுக்கு துப்பாக்கி சுடுதலில் முன்னணி வீராங்கனையாக திகழும் அஞ்சும் மோட்ஜில் பெயரை பரிந்துரை செய்திருக்கிறது. 2008-ம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று வரும் சண்டிகாரைச் சேர்ந்த 26 வயதான அஞ்சும் 2018-ம் ஆண்டு தென்கொரியாவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தையும் உறுதி செய்தார். இந்திய விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதுக்கு அஞ்சும் மோட்ஜில் தேர்வானால் அந்த விருதை பெறும் 2-வது துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை பெறுவார்.

இளவேனிலுக்கு அர்ஜூனா

அர்ஜூனா விருதுக்கு இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் மானுபாகெர், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன், வீரர்கள் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா ஆகியோரது பெயர் அனுப்பப்பட்டு உள்ளது. ஆசிய விளையாட்டு சாம்பியனான உத்தரபிரதேசத்தை சேர்ந்த 17 வயதான சவுரப் சவுத்ரி உலக கோப்பை, உலக சாம்பியன்ஷிப் இரண்டிலும் தங்கப்பதக்கத்தை ருசித்த ஒரே இந்தியர் ஆவார்.

முதலில் என்ஜினீயர், பிறகு வக்கீல், அதைத் தொடர்ந்து துப்பாக்கி சுடுதல் வீரராக உருவெடுத்துள்ள 30 வயதான அபிஷேக் வர்மா உலக கோப்பையில் இரண்டு தங்கப்பதக்கமும், ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றியிருக்கிறார். இருவருமே தங்களது அபாரமான செயல்பாட்டின் மூலம் ஒலிம்பிக் வாய்ப்பையும் வசப்படுத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான இளவேனில் கடந்த ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடந்த உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் அவர் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாக வலம் வருகிறார். அரியானாவைச் சேர்ந்த 18 வயதான மானுபாகெரும் உலக அளவிலான போட்டிகளில் 8 தங்கப்பதக்கத்தை அறுவடை செய்து பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

ஜஸ்பால் ராணா

சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருதுக்கு முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா பெயர் தொடர்ந்து 2-வது ஆண்டாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இந்த விருது ராணாவுக்கு நிராகரிக்கப்பட்ட போது முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ரா குரல் கொடுத்தார். தேர்வு முறை சரியில்லை என்று விமர்சித்தார்.

மானு பாகெர், சவுரப் சவுத்ரி, அனிஷ் பன்வாலா போன்ற இளம் வீரர்களை உலகத் தரம் வாய்ந்தவர்களாக உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்துள்ள ராணாவுக்கு இந்த தடவை உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று தேசிய ரைபிள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Next Story