பயிற்சி முகாமில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி கொரோனாவால் பாதிப்பு


பயிற்சி முகாமில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2020 1:13 AM GMT (Updated: 14 Aug 2020 1:13 AM GMT)

பயிற்சி முகாமில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத், 

இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் கடந்த 7-ந்தேதி முதல் நடந்து வந்தது. உலக சாம்பியன் பி.வி.சிந்து, சாய் பிரனீத் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் தனித்தனியாக வந்து பயிற்சியாளர்கள் உதவியுடன் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி இந்த முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இந்திய இரட்டையர் பிரிவு வீராங் கனை என்.சிக்கி ரெட்டிக்கும், அவரது உடல்தகுதி நிபுணர் டாக்டர் சி.கிரனுக்கும் அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கிருமி நாசினி திரவம் தெளித்து, சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக அகாடமி மூடப்பட்டது.

‘தேவையான அனைத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அகாடமியில் செய்யப்படுகின்றன. எனவே பாதுகாப்பான சூழலில் வீரர்கள் விரைவில் பயிற்சியில் ஈடுபட முடியும்’ என்று தேசிய பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்தார். குறைந்தது 4-5 நாட்கள் முகாம் நடைபெறாது என்று தெரிகிறது.


Next Story