உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 3 தங்கப்பதக்கம்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 3 தங்கப்பதக்கம்
x
தினத்தந்தி 22 March 2021 11:15 PM GMT (Updated: 22 March 2021 9:12 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா மேலும் 3 தங்கப்பதக்கங்களை வென்றது.

புதுடெல்லி, 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியின் 4-வது நாளான நேற்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவ்யனாஷ் சிங் பன்வார், இளவேனில் வாலறிவன் இணை துல்லியமாக இலக்கை நோக்கி சுட்டு தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

இறுதி சுற்றில் திவ்யனாஷ் சிங் பன்வார்-இளவேனில் ஜோடி 16-10 என்ற கணக்கில் உலகின் நம்பர் ஒன் இணையான ஹங்கேரியின் இஸ்வான் பெனி-எஸ்தர் டெனிஸ்சுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த போட்டி தொடரில் இந்தியா கைப்பற்றிய 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இந்த பிரிவில் இந்தியாவின் மற்றொரு ஜோடியான அஞ்சும் மோட்ஜில்-அர்ஜூன் பாபுதா தகுதி சுற்றில் 5-வது இடம் பிடித்து இறுதி சுற்று வாய்ப்பை இழந்தது. திவ்யனாஷ் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். அவர் இந்த போட்டியின் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்று இருந்தார்.

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய தமிழக வீராங்கனையான 21 வயது இளவேனில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் 2019-ம் ஆண்டில் ரியோடி ஜெனீரோ மற்றும் சீனாவில் நடந்த உலக கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி-மானு பாகெர் ஜோடி இறுதி சுற்றில் அபாரமாக செயல்பட்டு 16-12 என்ற கணக்கில் ஈரானின் கோல்னோஷ் செப்ஹதோல்லா-ஜாவித் பரூக்கி இணையை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்தது. 18 வயது வீரரான சவுரப் சவுத்ரி, 19 வயது வீராங்கனையான மானுபாகெர் ஆகியோர் இணைந்து உலக கோப்பை போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் வென்ற 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

இதே பிரிவில் 3-வது இடத்துக்கான பந்தயத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் யாஷஸ்வினி சிங் தேஸ்வால்-அபிஷேக் வர்மா இணை 17-13 என்ற கணக்கில் துருக்கியின் செவ்வல் லாய்டா தர்ஹான்-இஸ்மாயில் கெலிஸ் ஜோடியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கியது.

ஆண்களுக்கான ‘ஸ்கீட்’ அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் குர்ஜோத் கான்குரா, மைராஜ் அகமது கான், அன்கட் விர்சிங் பாஜ்வா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன் பெண்கள் பிரிவில் இறுதி சுற்றில் பாரினாஸ் தலிவால், கார்த்திகி சிங் சக்வாத், கானிமேட் செஹான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 4-6 என்ற கணக்கில் கஜகஸ்தான் அணியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.

4-வது நாள் போட்டிகள் முடிவில் இந்தியா 6 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அமெரிக்கா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.

Next Story