பெண்கள் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை மேரிகோம் போராடி தோல்வி


பெண்கள் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை மேரிகோம் போராடி தோல்வி
x
தினத்தந்தி 29 July 2021 9:14 PM GMT (Updated: 29 July 2021 9:14 PM GMT)

பெண்கள் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை மேரிகோம் போராடி தோல்வி நடுவர்களின் முடிவால் அதிருப்தி.

டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம், கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியாவை சந்தித்தார். 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு படையெடுத்த மேரிகோமுக்கு இது கடைசி ஒலிம்பிக் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அனுபவம் வாய்ந்த மேரிகோமுக்கு, ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான 32 வயதான வலென்சியா கடும் சவால் அளித்தார். முதல் ரவுண்டில் வலென்சியா தாக்குதல் தொடுப்பதில் வெற்றி கண்டு நடுவர்களின் கவனத்தை ஈர்த்து முன்னிலை வகித்தார். அடுத்த ரவுண்டில் மேரிகோம் தனது வியூகத்தை மாற்றி ஆக்ரோஷமாக எதிராளிக்கு குத்துகள் விட்டு பதிலடி கொடுத்தார். கடைசி ரவுண்டில் இருவரும் சரமாரியாக குத்துகளை பரிமாறினார்கள். இருப்பினும் நடுவர்களின் முடிவின்படி வலென்சியா 3-2 என்ற கணக்கில் மேரிகோமை போராடி வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

இதனால் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், 6 முறை உலக சாம்பியனுமான 38 வயதான மேரிகோமின் டோக்கியோ பதக்க கனவு கலைந்தது. வெற்றி பெற்ற வலென்சியா, போட்டி முடிந்ததும் மேரிகோமின் கைகளை பிடித்து உயர்த்தி தனது மரியாதையை மானசீகமாக வெளிப்படுத்தினார்.

நடுவர்களின் தீர்ப்பால் அதிருப்திக்குள்ளான மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம் கூறுகையில், ‘முதல் ரவுண்டில் இருவரும் எங்களது வியூகத்துக்கு தகுந்தபடி விளையாட முயற்சித்தோம். அடுத்த 2 ரவுண்டுகளில் நான் தான் வெற்றி பெற்றேன். ஆனால் நடுவர்கள் எந்த அடிப்படையில் முடிவை வழங்கினார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களின் தீர்ப்பு மோசமாக இருந்தது. அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை இன்னும் நம்ப முடியவில்லை. என்னால் தொடர்ந்து குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க முடியும். அதற்குரிய வலு என்னிடம் இருக்கிறது’ என்றார்.


Next Story