‘கேல்ரத்னா விருது பெறுவது கவுரவம்’ - நீரஜ் சோப்ரா பெருமிதம்


‘கேல்ரத்னா விருது பெறுவது கவுரவம்’ - நீரஜ் சோப்ரா பெருமிதம்
x
தினத்தந்தி 3 Nov 2021 9:59 PM GMT (Updated: 3 Nov 2021 9:59 PM GMT)

மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களுடன் இணைந்து கேல்ரத்னா விருது பெறுவது மிகவும் கவுரவமானது என நீரஜ் சோப்ரா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா, இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் மூத்த வீராங்கனை மிதாலிராஜ், மல்யுத்த வீரர் ரவிகுமார் உள்பட 12 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வருகிற 13-ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுடன் ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். 

இந்த நிலையில் கேல்ரத்னா விருதுக்கு தேர்வாகியுள்ள 23 வயதான நீரஜ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது, அதுவும் சில மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களுடன் இணைந்து விருதை பெறுவது மிகவும் கவுரவமானதாகும். எல்லா வகையிலும் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி. தேசத்துக்காக மேலும் பல சாதனைகளை படைக்க தொடர்ந்து கடினமாக உழைப்பேன்’ என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

கேல்ரத்னா விருதை வசப்படுத்தும் முதல் கால்பந்து வீரர் என்ற சிறப்புக்குரிய 36 வயதான சுனில் சேத்ரி இந்திய அணிக்காக 16 ஆண்டுகள் விளையாடி வருகிறார். 125 சர்வதேச போட்டிகளில் 80 கோல்கள் அடித்துள்ள அவர் கூறுகையில், ‘எனக்கு இந்த கவுரவம் கிடைத்திருப்பது மிகவும் திரில்லிங்காக இருக்கிறது. கேல்ரத்னா விருது எனக்கு கனவு என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். அது இப்போது நனவாகியுள்ளது. எனது குடும்பத்தினர், சக வீரர்கள், பயிற்சியாளர்கள் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவது வியப்புக்குரியது. இது ஒரு அற்புதமான பயணம்’ என்றார்.

Next Story