ஒலிம்பிக் வாய்ப்பை இழந்ததால் சோர்ந்து போய்விடவில்லை’ : உலக பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த்


ஒலிம்பிக் வாய்ப்பை இழந்ததால் சோர்ந்து போய்விடவில்லை’ : உலக பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த்
x
தினத்தந்தி 21 Dec 2021 8:19 PM GMT (Updated: 21 Dec 2021 8:19 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியாமல் போனதால் சோர்ந்து போய் விடாமல் நம்பிக்கையுடன் அடுத்த போட்டிகளில் கவனம் செலுத்தினேன் ஸ்ரீகாந்த் கூறினார்.

ஐதராபாத், 

டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியாமல் போனதால் சோர்ந்து போய் விடாமல் நம்பிக்கையுடன் அடுத்த போட்டிகளில் கவனம் செலுத்தினேன் என்று உலக பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கூறினார்.

ஸ்பெயினில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் நேர் செட்டில் சிங்கப்பூர் வீரர் லோ கியானிடம் தோல்வியை தழுவி வெள்ளிப்பதக்கம் பெற்றார். இருப்பினும் உலக பேட்மிண்டனில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையோடு தாயகம் திரும்பிய அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமிக்கு நேற்று சென்று பயிற்சியாளர் கோபிசந்திடம் வாழ்த்து பெற்ற 28 வயதான ஸ்ரீகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. அந்த சமயத்தில் இந்திய வீரர்களில் நான் தான் தரவரிசையில் உயர்ந்த நிலையில் இருந்தேன். ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் கிட்டத்தட்ட 7 முதல் 9 தொடர்கள் கொரோனா பிரச்சினையால் ரத்து செய்யப்பட்டன. தகுதி சுற்றின் முதல் பகுதியை எடுத்துக் கொண்டால் காயத்தால் என்னால் விளையாட முடியவில்லை. 2-வது பகுதியில் காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல்தகுதியுடன் இருந்தேன். ஆனால் போட்டிகள் நடக்கவில்லை.

2021-ம் ஆண்டில் மீண்டும் பேட்மிண்டன் போட்டிகள் தொடங்கி நடைபெறும் என்று கூறினார்கள். சுவிட்சர்லாந்து ஓபனில் அரைஇறுதியை எட்டினேன். இதன் மூலம், மேலும் பல போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தரவரிசையில் ஏற்றம் கண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கை வந்தது. ஆனால் மறுபடியும் ஒவ்வொரு தொடர்களும் ரத்தாகின. இந்த விஷயங்களில் எனது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை.

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி வாய்ப்பை இழந்த அன்றைய தினம், ‘ஒலிம்பிக்கில் விளையாட முடியாமல் போவதன் மூலம் உலகம் ஒன்றும் முடிந்து விடப்போவதில்லை. நமக்கான வாய்ப்பு வரும். அதை நோக்கி உழைப்போம்’ என்று எனக்குள் கூறி ஊக்கப்படுத்திக் கொண்டேன். அந்த வகையில் இப்போது உலக பேட்மிண்டனில் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதை கொண்டாட எனக்கு நேரம் இல்லை. விளையாட்டில் அடுத்த ஆண்டு (2022) எனக்கு முக்கியமான ஆண்டாகும். வருகிற 10-ந்தேதி இந்திய ஓபன் தொடங்குகிறது. மார்ச் மாதம் ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் நடக்கிறது. அதைத் தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு, பிறகு உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு என்று மிகப்பெரிய போட்டிகள் வருகின்றன. அடுத்த 8 முதல் 10 மாதங்கள் எனக்கு மிகவும் முக்கியமானது. பயிற்சியாளர் கோபிசந்துடன் கலந்தாலோசித்து கடந்த சில மாதங்களில் போட்டியில் நான் செய்த தவறுகளை கேட்டறிந்து அதை சரிப்படுத்தி கொள்ள முயற்சிப்பேன். ஆட்டத்திறனை மேம்படுத்துவதிலும், உடல்தகுதியை தக்க வைப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவேன். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

இதற்கிடையே நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசை பட்டியலில் ஸ்ரீகாந்த் 4 இடங்கள் எகிறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் கைப்பற்றிய இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 2 இடம் அதிகரித்து தனது சிறந்த நிலையாக 17-வது இடத்தை பெற்றுள்ளார். முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் சிந்து, பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் 7-வது இடத்தில் நீடிக்கிறார்.

Next Story