உபேர் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்


உபேர் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 10 May 2022 8:56 PM GMT (Updated: 10 May 2022 8:56 PM GMT)

இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது.

பாங்காக்,

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 16 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டியில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவை எளிதில் தோற்கடித்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்ததுடன் கால்இறுதிக்கும் முன்னேறியது. முந்தைய லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை வென்று இருந்தது.

இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-10, 21-11 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜென்னி காயை விரட்டியடித்தார். மற்ற ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் ஆகார்ஷி காஷ்யப், அஷ்மிதா சாலிஹா ஆகியோர் வெற்றி பெற்றனர். இரட்டையர் பிரிவில் தனிஷா கிரஸ்டோ-திரிஷா ஜாலி ஜோடி தங்களது ஆட்டத்தில் வெற்றி கண்டது. மற்றொரு இந்திய இணையான சிம்ரன் சிங்கி-ரித்திகா தாகெர் ஆகியோர் தோல்வி அடைந்தனர். இந்திய பெண்கள் அணி இன்று நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை சந்திக்கிறது.

ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் (சி பிரிவு) வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் சீன தைபேயுடன் மோதுகிறது.

Next Story