ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்று: முதல் நாளில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்
ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்று கிர்கிஸ்தானின் பிஷ்கேக் நகரில் நேற்று தொடங்கியது.
பிஷ்கேக்,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்துக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று கிர்கிஸ்தானின் பிஷ்கேக் நகரில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் முதல் நாளில் இந்தியாவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.
ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமன் செராவத் முதல் சுற்றில் யராசில் முக்தாருலியையும் (கஜகஸ்தான்), கால்இறுதியில் சங்வோனையும் (தென்கொரியா) தோற்கடித்து அரைஇறுதிக்கு வந்தார். அரைஇறுதியில் அவர் உஸ்பெகிஸ்தானின் குலோம்ஜோன் அப்துல்லாவுடன் மோதினார். இதில் எதிராளியின் பிடியில் இருந்து மீள முடியாமல் அடங்கிய அமன் செராவாத் 0-10 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெளியேறினார். இறுதிப்போட்டிக்கு வந்திருந்தால் பாரீஸ் ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்திருப்பார்.
இதே போல் 74 கிலோ பிரிவில் ஜெய்தீப், 125 கிலோ பிரிவில் சுமித் மாலிக் ஆகியோரும் தோல்வியை தழுவினர். இதற்கிடையே, மோசமான வானிலையில் துபாயில் இருந்து விமானத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் புறப்பட முடியாமல் தவித்த இந்திய வீரர்கள் தீபக் பூனியா (86 கிலோ), சுஜீத் கலக்கல் (65 கிலோ) தாமதமாக கிர்கிஸ்தான் சென்றடைந்தனர். ஆனால் போட்டிக்குரிய நேரத்திற்குள் செல்லாததால் இருவரும் களம் காண அனுமதிக்கப்படவில்லை. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.