ஒலிம்பிக் தீபத்தை கடல்மார்க்கமாக கொண்டு வர பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டி ஏற்பாடு


ஒலிம்பிக் தீபத்தை கடல்மார்க்கமாக கொண்டு வர பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டி ஏற்பாடு
x

அடுத்த ஆண்டு ஒலிம்பிக் தீபத்தை கடல்மார்க்கமாக கொண்டு வர பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டி ஏற்பாடு செய்துள்ளது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு (2024) ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. பிரான்சில் 100 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் விளையாட்டு நடக்க இருப்பதால் அந்த நாட்டு அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதற்கிடையே அடுத்த ஆண்டு ஒலிம்பிக் தீபத்தை கடல்மார்க்கமாக கொண்டு வர பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டி ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமாக, ஒலிம்பிக் போட்டி தோன்றிய இடமான கிரீஸ் தலைநகர் ஏதென்சில் பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, அங்கு தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும். பிறகு ஒலிம்பிக் தீபம் போட்டி நடைபெறும் நாட்டிற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் வித்தியாசமான முயற்சியாக ஏதென்சில் ஏற்றப்படும் ஒலிம்பிக் தீபம் கப்பலில் எடுத்து வரப்பட்டு பிரான்சின் துறைமுக நகரான மார்செலியை வந்தடையும். இங்கிருந்து தீபம் தொடர் ஓட்டமாக கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்க இருப்பது நினைவு கூரத்தக்கது.


Next Story