பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு


பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு
x
தினத்தந்தி 6 March 2024 11:59 PM GMT (Updated: 7 March 2024 3:16 AM GMT)

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன

லாசானே,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி போட்டிக்குரிய அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. சுவிட்சர்லாந்தின் லாசானேவில் உள்ள ஒலிம்பிக் கமிட்டி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் தயாப் இக்ராம் ஆகியோர் கலந்து கொண்டு போட்டி அட்டவணையை வெளியிட்டனர்.

இதன்படி ஆக்கி போட்டி ஜூலை 27-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை அரங்கேறுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் நெதர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், அர்ஜென்டினா, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

தொடக்க நாளான ஜூலை 27-ந் தேதி நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்துடன் (இரவு 9 மணி) மோதுகிறது. இந்தியா தன்னுடைய அடுத்த லீக் ஆட்டங்களில் 29-ந் தேதி அர்ஜென்டினாவையும் (மாலை 4.15 மணி), 30-ந் தேதி அயர்லாந்தையும் (மாலை 4.45 மணி), ஆகஸ்டு 1-ந் தேதி பெல்ஜியத்தையும் (பகல் 1.30 மணி), 2-ந் தேதி ஆஸ்திரேலியாவையும் (மாலை 4.45 மணி) சந்திக்கிறது. ஆகஸ்டு 4-ந்தேதி கால்இறுதி ஆட்டமும், 6-ந்தேதி அரைஇறுதி ஆட்டமும், 8-ந்தேதி இறுதிப்போட்டியும் நடக்கிறது.

பெண்களுக்கான 'ஏ' பிரிவில் கடந்த முறை தங்கப்பதக்கம் வென்ற நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ஜப்பான், சீனா, பிரான்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா அணிகளும் அங்கம் வகிக்கின்றன. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெறவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

இதில் தொடக்க நாளில் (ஜூலை 27-ந் தேதி) நடைபெறும் லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா - அமெரிக்கா, நெதர்லாந்து- பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆகஸ்டு 5-ந் தேதி கால்இறுதி ஆட்டமும், 7-ந் தேதி அரைஇறுதி ஆட்டமும், 9-ந் தேதி இறுதிப்போட்டியும் நடக்கிறது.


Next Story