உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணிக்கு கோப்பை வழங்கிய முதல் அமைச்சர்


உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணிக்கு கோப்பை வழங்கிய முதல் அமைச்சர்
x

சென்னையில் நடந்த உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

எகிப்து அணி 'சாம்பியன்'

4-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று நடந்த மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான எகிப்து அணி 2-1 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. தோல்வி அடைந்த மலேசியா 2-வது இடத்தை பெற்றது. முதலாவது ஆட்டத்தில் எகிப்து வீரர் கென்சி அய்மான் 4-7, 5-7, 6-7 என்ற நேர்செட்டில் மலேசியாவின் ஜின் யிங் யீடம் தோல்வி கண்டார். இருப்பினும் எகிப்தின் அலி அபோய் எலினென், பாய்ரோஸ் அபெல்கெர் தங்கள் ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வழிவகுத்தனர்.

அரைஇறுதியில் தோல்வி கண்ட இந்தியா, ஜப்பான் அணிகள் இணைந்து 3-வது இடத்தை பெற்றன. முன்னதாக நடந்த 5-வது இடத்தை முடிவு செய்வதற்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்தது. 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை விரட்டியடித்தது.

மு.க.ஸ்டாலின் கோப்பையை வழங்கினார்

பின்னர் பரிசளிப்பு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலிடம் பிடித்த எகிப்து அணிக்கு தங்க கோப்பையையும், 2-வது இடம் பிடித்த மலேசியா அணிக்கு வெள்ளி கோப்பையையும், 3-வது இடம் பெற்ற இந்தியா, ஜப்பான் அணிகளுக்கு வெண்கல கோப்பையையும், பரிசுத் தொகையையும் வழங்கி பாராட்டினார். முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.8.20 லட்சமும், 2-வது இடத்தை பெற்ற அணிக்கு ரூ.6.56 லட்சமும், 3-வது இடம் பெற்ற அணிகளுக்கு தலா ரூ.4.92 லட்சமும் பரிசுத் தொகையாக அளிக்கப்பட்டது.

முதல் 3 இடங்களை பிடித்த அணிகளின் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கங்கள் அணிவித்தார். விழாவில் தயாநிதி மாறன் எம்.பி, விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு தலைவர் ஜீனா வூல்ட்ரிட்ஜ், போட்டி அமைப்பு குழு தலைவர் என்.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'கடந்த ஆண்டு உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடந்தது. அதன் மூலமாக தமிழ்நாடு உலகப்புகழ் அடைந்தது. 4 மாதங்களில் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்தது. உலகமே வியக்கும் அளவுக்கு நாம் போட்டிகளை நடத்தி காட்டினோம். அதன் மூலம் சர்வதேச போட்டிகளுக்கு விருப்பமான இடமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. அத்தகைய கவனத்துடனும், பொறுப்புணர்வுடனும் தான் இப்போதும் இந்த உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி அரசு ஒத்துழைப்புடன் நடைபெற்றுள்ளன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி இதுபோன்ற போட்டிகளை தனிப்பட்ட சம்மேளனங்கள் நடத்தும் போட்டியாக அல்லாமல் அரசு நடத்தும் போட்டிகளை போல் உதவிகளை செய்து வருகிறார்.

ஆகஸ்டு மாதத்தில் சென்னையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியும், மகாபலிபுரத்தில் உலக சர்பிங் லீக்கையும் நம் மாநிலம் நடத்த உள்ளது. இந்த ஆண்டுக்கான கேலோ இந்தியா போட்டி நமது மாநிலத்தில் நடைபெற உள்ளது. விளையாட்டு உள்கட்டமைப்பில் அரசு நவீன வசதிகளை உருவாக்கி வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.


Next Story