இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் செரீனா-வீனஸ் மோதல்


இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் செரீனா-வீனஸ் மோதல்
x
தினத்தந்தி 11 March 2018 10:00 PM GMT (Updated: 11 March 2018 8:30 PM GMT)

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் செரீனா - வீனஸ் மோத உள்ளனர்.

இண்டியன்வெல்ஸ்,

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-6 (5), 7-5 என்ற நேர் செட் கணக்கில் கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) தோற்கடித்தார். இந்த ஆட்டம் ஒரு மணி 51 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் சோரனா கிர்ஸ்டியாவை (ருமேனியா) விரட்டினார். 3-வது சுற்றில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சகோதரிகள் செரீனாவும், வீனசும் மல்லுகட்ட இருக்கிறார்கள். இருவரும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் செரீனா 17-லிலும், வீனஸ் 11-லிலும் வெற்றி கண்டுள்ளனர்.

இன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-4, 6-1 என்ற நேர் செட்டில் லாரா ஆருபரெனாவை (ஸ்பெயின்) வீழ்த்தினார். ஸ்விடோலினா (உக்ரைன்), எலினா வெஸ்னினா (ரஷியா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) உள்ளிட்டோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்கள் பிரிவின் 2-வது சுற்றில் உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 7-6 (4), 4-6, 6-3 என்ற செட் கணக்கில் பெர்னாண்டோ வெர்டஸ்கோ (ஸ்பெயின்) சாய்த்தார். நேரடியாக 2-வது சுற்றில் களம்இறங்கிய நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) டெல்போனிசை (அர்ஜென்டினா) எதிர்த்து ஆடினார். இதில் பெடரர் 6-3, 2-2 என்ற கணக்கில் பெடரர் முன்னிலை பெற்றிருந்த போது இந்த ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.

முன்னதாக தகுதி நிலை வீரரான இந்தியாவின் யுகி பாம்ப்ரி தனது முதல் சுற்றில் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் பிரான்சின் நிகோலஸ் மகுத்தை சாய்த்தார். இந்தபோட்டி ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கக்கூடியதாகும். இந்த வகை போட்டியில் யுகி பாம்ப்ரி பெற்ற முதல் வெற்றி இது தான்.

Next Story