டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடக்கம் - பெடரர் பட்டம் வெல்வாரா? + "||" + Wimbledon Tennis Tournament begins today in London - Will Federer win the degree?

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடக்கம் - பெடரர் பட்டம் வெல்வாரா?

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடக்கம் - பெடரர் பட்டம் வெல்வாரா?
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
லண்டன்,

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது. நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டனுக்கு சில பாரம்பரியம் உண்டு. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் வெள்ளை நிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டாப்-3 வீரர்களான நோவக் ஜோகோவிச் (செர்பியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

புல்தரை போட்டிகளில் சிறப்பாக ஆடக்கூடியவரான ரோஜர் பெடரர் விம்பிள்டன் பட்டத்தை 8 முறை வென்ற சாதனையாளர் ஆவார். 37 வயதான அவர் மீண்டும் மகுடம் சூடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் தனது முதல் சுற்றில் லாயிட் ஹாரிசை (தென்ஆப்பிரிக்கா) சந்திக்கிறார். விம்பிள்டனில் இதுவரை 95 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள பெடரர் அரைஇறுதியை எட்டினால் இங்கு வெற்றியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற மகிமையை பெறுவார்.

நடப்பு சாம்பியனான ஜோகோவிச் முதல் சுற்றில் ஜெர்மனியின் கோல்ஸ்கிரீபருடன் மோதுகிறார். டொமினிக் திம் (ஆஸ்திரியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோரும் கடும் சவால் கொடுக்க காத்திருக்கிறார்கள். ஒற்றையர் பிரிவில் களம் காணும் ஒரே இந்தியரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதல் சுற்றில் 17-ம் நிலை வீரர் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை சந்திக்கிறார்.

பெண்கள் பிரிவிலும் பட்டம் வெல்ல போட்டா போட்டி காணப்படுகிறது. புதிய நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா), நவோமி ஒசாகா (ஜப்பான்), சிமோனா ஹாலெப் (ருமேனியா), நடப்பு சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பெட்ரா கிவிடோ (செக்குடியரசு), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), வோஸ்னியாக்கி (டென்மார்க்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) உள்ளிட்டோர் வரிந்து கட்டி நிற்கிறார்கள்.

7 விம்பிள்டன் பட்டம் உள்பட 23 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றியவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை. அந்த குறையை போக்க முனைப்பு காட்டி வரும் அவர் முதல் சுற்றில் தகுதி நிலை வீராங்கனை இத்தாலியின் மோன்டிகோனை சந்திக்கிறார். செரீனா கலப்பு இரட்டையரில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவுடன் கைகோர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.332 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் வாகை சூடும் வீரர், வீராங்கனை தலா ரூ.20½ கோடியை பரிசுத்தொகையாக அள்ளுவதுடன், 2 ஆயிரம் தரவரிசை புள்ளியையும் பெறுவார்கள். 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.10¼ கோடி பரிசாக கிடைக்கும்.

முதல் நாளில் ஜோகோவிச், நவோமி ஒசாகா, ஹாலெப், கெவின் ஆண்டர்சன் மற்றும் இந்தியாவின் குணேஸ்வரன் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள். இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.