விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி - ஒசாகா அதிர்ச்சி தோல்வி


விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி - ஒசாகா அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 1 July 2019 10:45 PM GMT (Updated: 1 July 2019 9:56 PM GMT)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார். ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி கண்டார்.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 7-5, 6-3 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் கோல்ஸ்கிரீபரை எளிதில் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 3 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் ருபென் பெமெல்மான்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-4, 3-6, 2-6, 5-7 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் ஜிரி வெஸ்லியிடம் தோல்வி அடைந்தார். மற்ற ஆட்டங்களில் கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), கச்சனோவ் (ரஷியா), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), லெனாட்டோ மேயர் (அர்ஜென்டினா), இவா கார்லோவிச் (குரோஷியா), டிப்சரேவிச் (செர்பியா), பெர்னாண்டோ வெர்டாஸ்கோ (ஸ்பெயின்), பெலிக்ஸ் அகெர் (கனடா), பெலிசியானோ லோபெஸ் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவருமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-7 (4-7), 2-6 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீராங்கனை புதின்சேவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு), ரைபரிகோவா (சுலோவக்கியா), செவஸ்தோவா (லாத்வியா), ஹீதர் வாட்சன் (இங்கிலாந்து), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), மோனிகா புய்க் (புயர்டோரிகோ), டேனிலி காலின்ஸ் (அமெரிக்கா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பெட்ரா மார்டிக் (குரோஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.


Next Story