விம்பிள்டன் டென்னிஸ்: ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்


விம்பிள்டன் டென்னிஸ்: ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 6 July 2019 11:46 PM GMT (Updated: 6 July 2019 11:46 PM GMT)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா) 6-1, 6-1 என்ற நேர்செட்டில் 132-ம் நிலை வீராங்கனையான ஹார்ரிட் டார்டை (இங்கிலாந்து) எளிதில் தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 7 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 17-வது இடத்தில் இருக்கும் ஜூலியா ஜார்சை (ஜெர்மனி) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் 2 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான கிவிடோவா (செக் குடியரசு) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் 75-வது நிலை வீராங்கனையான மாக்டா லின்னெட்டை (போலந்து) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்ற ஆட்டங்களில் ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) பார்போரோ ஸ்டிரிகோவா (செக்குடியரசு), அலிசன் ரிஸ்க் (அமெரிக்கா), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கார்லா சுவாரஸ் நவரோவா (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-2, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 72-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் சோங்காவை எளிதில் தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-4, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் 71-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் சாம் குயரி (அமெரிக்கா) 7-6 (7-3), 7-6 (10-8), 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மனை தோற்கடித்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்களில் திவிஜ் சரண் (இந்தியா)-யிங் யிங் டுன் (சீனா) ஜோடி, ரோகன் போபண்ணா (இந்தியா)-சபலென்கா (பெலாரஸ்) இணை தோல்வி கண்டு வெளியேறியது.


Next Story