டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பெடரர் வெற்றி; நடால் தோல்வி


டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பெடரர் வெற்றி; நடால் தோல்வி
x
தினத்தந்தி 12 Nov 2019 11:25 PM GMT (Updated: 12 Nov 2019 11:25 PM GMT)

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், பெடரர் வெற்றிபெற்றார்.

லண்டன்,

டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘போர்க்’ பிரிவில் இடம் பெற்றுள்ள 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) நேற்று நடந்த ஆட்டத்தில் 7-6 (7-2), 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெரேட்டினியை (இத்தாலி) தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பெடரர் அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார். தனது முதல் ஆட்டத்தில் டொமினிக் திம்மிடம் (ஆஸ்திரியா) தோல்வி கண்ட பெடரர் கடைசி லீக்கில் 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொள்கிறார்.



 


  முன்னதாக நேற்று முன்தினம் இரவு ‘அகாசி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் (ஜெர்மனி) பணிந்தார். ஸ்வெரேவுக்கு எதிராக நடால் சந்தித்த முதல் தோல்வி இது தான். இதற்கு முன்பு அவருக்கு எதிராக மோதிய 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தார். நடால் கூறுகையில், ‘வயிற்றில் ஏற்பட்ட காயத்துக்கும், தோல்விக்கும் சம்பந்தமில்லை. வயிற்றில் இப்போது எனக்கு வலி இல்லை. எதிராளிக்கு சவால் கொடுக்கும் அளவுக்கு நான் விளையாடவில்லை. அது தான் தோல்விக்கு காரணம்’ என்றார்.

கவுரவமிக்க இந்த பட்டத்தை ஒரு முறை கூட வெல்லாத நடால் அரைஇறுதிக்கு முன்னேற எஞ்சிய இரு லீக்கிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.


Next Story