சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டி இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்


சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டி இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்
x
தினத்தந்தி 10 Feb 2020 11:45 PM GMT (Updated: 10 Feb 2020 9:31 PM GMT)

சென்னையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பைக்கான தேசிய டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்.

சென்னை,

சென்னை அடையாறில் உள்ள காந்தி நகர் கிளப் மைதானத்தில், பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பைக்கான தேசிய டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டி பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கியது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட 160 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 97 பேர் ஆவர். 63 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இதன் ஆண்கள் பிரிவு ஒற்றையர் இறுதிப்போட்டியில் கோவை வீரர் பூபதி சக்திவேலுவும், பெங்களூர் வீரர் எரிக் நிகிலனும் மோதினார்கள். இதில் எரிக் நிகிலன் 6-1, 4-6, 6-4 என்ற செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் மராட்டியத்தைச் சேர்ந்த அகன்ஷா நிதுரோ மற்றும் வைஷ்ணவி அதுகல் ஆகியோர் மோதினார்கள். இதில் அகன்ஷா நிதுரோ 6-3, 4-6, 6-4 என்ற செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

வெற்றி பெற்றவர்களுக்கு மாலை முரசு நாளிதழ் மற்றும் மாலை முரசு தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘இந்த விளையாட்டு கிளப் தொடக்கத்தில் மாநில அளவிலான போட்டிகளை மட்டுமே நடத்தியது. தற்போது தேசிய அளவில் போட்டிகளை நடத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது பெருமை தரும் அம்சமாகும். காந்தி நகர் கிளப் இதுவரை நடத்திய அனைத்து மாநில மற்றும் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் எங்களுடைய பங்களிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இனிவரும் காலங்களிலும் இது தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

வெற்றி பெற்றவர்களுக்கு இந்த போட்டி மேலும் வளர்ச்சியடைய வெற்றிப் படிக்கட்டாக அமையும். அதோடு தோல்வியடைந்தவர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன். இன்றைய குழந்தைகள் செல்போனிலேயே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோன்ற குழந்தைகளுக்கும் இப்படிப்பட்ட போட்டிகள் வெளியில் வந்து விளையாட ஊக்கமளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதுபோன்ற போட்டிகளை நடத்துவது சுலபமல்ல. அதில் நிறைய நபர்களின் கடின முயற்சிகளும் உள்ளன. இதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன். வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Next Story