இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் 10-வது முறையாக ‘சாம்பியன்’ ஜோகோவிச்சை வீழ்த்தினார்


இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் 10-வது முறையாக ‘சாம்பியன்’ ஜோகோவிச்சை வீழ்த்தினார்
x
தினத்தந்தி 17 May 2021 4:00 PM GMT (Updated: 17 May 2021 4:00 PM GMT)

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி ரபெல் நடால் 10-வது முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.

இத்தாலி ஓபன்...

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. களிமண் தரையிலான இந்த போட்டியில் நேற்று இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), உலக தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரும், களிமண் தரையின் கதாநாயகனுமான ரபெல் நடாலை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் இருவரும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தனர். 1¼ மணி நேரம் நீடித்த இந்த செட்டில் கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ரபெல் நடால் முதல் செட்டை தன்வசப்படுத்தினார். அடுத்த செட்டை ஜோகோவிச் எளிதில் சொந்தமாக்கினார். அந்த செட்டில் ரபெல் நடால் ஒரே ஒரு புள்ளி மட்டுமே பெற்றார். கடைசி செட்டில் தொடக்கத்தில் ரபெல் நடாலுக்கு சவால் அளித்த ஜோகோவிச்சால் கடைசி தருணத்தில் ஈடுகொடுக்க முடியாமல் போராடி வீழ்ந்தார்.

ரபெல் நடால் ‘சாம்பியன்’

2 மணி 49 நிமிடம் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 7-5, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். 12-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ரபெல் நடால் இத்தாலி ஓபன் பட்டத்தை கைப்பற்றுவது இது 10-வது முறையாகும். அவர் 2005-ம் ஆண்டில் முதல்முறையாக இந்த பட்டத்தை வென்று இருந்தார். இதேபோல் பிரெஞ்ச் ஓபன் (13 முறை), பார்சிலோனா ஓபன் (12 தடவை), மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் (11 முறை) ஆகிய போட்டிகளிலும் ரபெல் நடால் 10 மற்றும் அதற்கு அதிகமான தடவை பட்டம் வென்று அசத்தி இருக்கிறார்.

57-வது முறையாக ஜோகோவிச்சுடன் மோதிய ரபெல் நடால் பெற்ற 28-வது வெற்றி இதுவாகும். ரபெல் நடாலுக்கு எதிராக 29 வெற்றிகளை பெற்று இருக்கும் ஜோகோவிச் 2016-ம் ஆண்டு இத்தாலி ஓபன் டென்னிஸ் கால்இறுதிக்கு பிறகு களிமண் தரை போட்டியில் ரபெல் நடாலை வீழ்த்தியது இல்லை என்ற சோகம் இன்னும் தொடருகிறது.

சாதனையை சமன் செய்தார்

சாம்பியன் பட்டம் வென்ற ரபெல் நடாலுக்கு ரூ.2 கோடியே 17 லட்சம் பரிசுத் தொகையும், 1,000 தரவரிசை புள்ளியும் கிடைத்தன. 2-வது இடம் பெற்ற ஜோகோவிச்சுக்கு ரூ.1 கோடியே 28 லட்சம் பரிசாக கிடைத்தது.

1,000 தரவரிசை புள்ளி கொண்ட சர்வதேச மாஸ்டர்ஸ் போட்டியில் 34 வயது ரபெல் நடால் வென்ற 36-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் இந்த வகையிலான போட்டியில் அதிக பட்டம் வென்று இருந்த 33 வயது நோவக் ஜோகோவிச்சின் (36 பட்டம்) சாதனையை ரபெல் நடால் சமன் செய்தார்.

ஜோகோவிச் கருத்து

வெற்றிக்கு பிறகு ரபெல் நடால் அளித்த பேட்டியில், ‘இத்தாலி ஓபன் கோப்பையை 10-வது முறையாக கைப்பற்றியது அற்புதமானது. இது நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயமாகும். உண்மையிலேயே இந்த பட்டத்தை வெல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். எனது வாழ்க்கையில் முதலாவது வென்ற முக்கியமான பட்டங்களில் இத்தாலி ஓபனும் ஒன்றாகும். கடந்த சில வாரங்களில் என்னுடைய ‘போர்ஹேன்ட்’ ஷாட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக இது களிமண் தரைபோட்டியில் எனது நம்பிக்கையை அதிகரிக்கும்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து ஜோகோவிச் கருத்து தெரிவிக்கையில், ‘ஏறக்குறைய 3 மணி நேரம் நாங்கள் இருவரும் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்த போட்டியில் வெல்லாதது நிச்சயம் ஏமாற்றம் அளித்தாலும், இந்த போட்டி தொடரின் இறுதி கட்டத்தில் நான் விளையாடிய விதம் மனநிறைவை அளிக்கிறது. இந்த போட்டி தொடரில் கடைசி 2 ஆட்டங்களில் விளையாடியது போல் சிறப்பாக செயல்பட்டால் வருகிற பிரெஞ்ச் ஓபன் போட்டியில் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறேன்’ என்றார்.


Next Story