‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முன்னணி வீரர்களை வீழ்த்துவேன்’; டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் நம்பிக்கை


‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முன்னணி வீரர்களை வீழ்த்துவேன்’; டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் நம்பிக்கை
x
தினத்தந்தி 24 May 2021 9:16 PM GMT (Updated: 24 May 2021 9:16 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முன்னணி வீரர்களை வீழ்த்துவேன் என்று இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் நம்பிக்கை தெரிவித்தார்.

சத்யன் பேட்டி

கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான டேபிள் டென்னிஸ்க்கு இந்தியாவில் இருந்து சரத் கமல் (ஆண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர்), சத்யன் (ஆண்கள் ஒற்றையர்), மணிகா பத்ரா (பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர்), சுதிர்தா முகர்ஜி (பெண்கள் ஒற்றையர்) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக சென்னையை சேர்ந்த 28 வயதான சத்யன் தீவிரமாக தயாராகி வருகிறார். உலக டேபிள் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் 38-வது இடத்தில் இருக்கும் சத்யன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவது குறித்து ‘தினத்தந்தி’க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த ஆண்டு முதல்முறையாக கொரோனா தாக்கத்தின் போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது தான் பயிற்சியில் ஈடுபடுவதில் பிரச்சினை இருந்தது. அப்போது ஒரு சிறிய அறையில் தான் பயிற்சி செய்ய முடிந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் வீட்டில் தங்கு தடையின்றி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். வீட்டின் மேல் தளத்தில் விளையாடுவதற்காக தனியாக அரங்கம் கட்டி இருப்பதால் சிரமமின்றி பயிற்சி மேற்கொள்ள முடிகிறது. வீட்டிலேயே மினி ஜிம் வசதியை ஏற்படுத்தி இருக்கிறேன். தேசிய வீரரான அனிர்பன் கோஷ்சை (கொல்கத்தா) பயிற்சி இணையாக அழைத்து எனது வீட்டில் தங்க வைத்து இருக்கிறேன். அவருடன் சேர்ந்து பயிற்சி எடுத்து வருகிறேன். எனது பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை வாங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவியது.

சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்

உடல் தகுதி மற்றும் பயிற்சி திட்டம் குறித்து ஆன்லைன் மூலம் பயிற்சியாளர்களுடன் கலந்து பேசி செயல்பட்டு வருகிறேன். என்ன தான் இருந்தாலும் முழுமையான வசதிகளை கொண்ட பயிற்சி மையத்துக்கு சென்று பயிற்சியாளர் முன்னிலையில் பயிற்சியில் ஈடுபடுவதற்கும், ஆன்லைன் மூலம் ஆலோசனை பெற்று பயிற்சி மேற்கொள்வதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்க தான் செய்யும். பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டால் போட்டிக்கு முழுமையாக தயாராக வசதியாக இருக்கும். வழக்கம் போல் இல்லாமல் இப்போது என்னால் 60 முதல் 70 சதவீதம் தான் பயிற்சி மேற்கொள்ள முடிகிறது. ஓடுவது போன்ற பயிற்சிகளை வீட்டில் செய்ய முடியவில்லை. விரைவில் ஊரடங்கு முடிவுக்கு வராவிட்டால் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்கள் அவர்களுக்குரிய பயிற்சி மையத்தில் ஈடுபட சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு வேண்டுகோள் வைத்து இருக்கிறோம். இதற்காக அரசின் ஒப்புதலை எதிர்நோக்கி காத்து இருக்கிறோம். விரைவில் அனுமதி கிடைத்தால் முழுமையான உத்வேகத்துடன் பயிற்சியில் ஈடுபட முடியும்.

வெளிநாட்டு வீரர்களை சென்னைக்கு அழைத்து அவர்களுடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடலாம் என்று முயற்சித்தோம். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிநாட்டு வீரர்கள் வர மறுத்து விட்டனர். கொரோனா பாதிப்பு காரணமாக சர்வதேச போட்டிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு விட்டன. வெளிநாடு சென்று பயிற்சி செய்யலாம் என்றால் பயண கட்டுப்பாடு காரணமாக விசா கிடைப்பதில் பிரச்சினை இருக்கிறது.

முன்னணி வீரர்களை வீழ்த்துவேன்

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றுள்ள நான் 2019-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஹரிமோட்டோவை (ஜப்பான்) வீழ்த்தினேன். இதேபோல் முன்னணி வீரர்களை தோற்கடிக்கும் போது நம்பிக்கை அதிகரிக்கும். எனக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது லட்சியமாகும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த ஒலிம்பிக்கில் குறைந்தபட்சம் கால்இறுதிக்கு முன்னேறுவதை இலக்காக வைத்து ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவேன். சீனா, ஜப்பான், ஜெர்மனி நாட்டு வீரர்கள் கடும் சவாலாக இருப்பார்கள். இந்த போட்டியில் ஒன்றிரண்டு முன்னணி வீரர்களையாவது வீழ்த்த வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். அதனை செய்தால் பதக்கத்தையும் கைப்பற்றலாம். அதற்காக முழு முயற்சி மேற்கொள்வேன். அடுத்த (2024) ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் நான் வலுவான போட்டியாளராக விளங்குவேன்.

டோக்கியோ புறப்படுவது எப்போது?

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் இந்த ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா? என்பதில் எனக்கு முதலில் சந்தேகம் இருந்தது. ஆனால் நிச்சயம் போட்டி நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுதி அளித்து இருப்பதால் இந்த போட்டி திட்டமிட்டபடி அரங்கேறும் என்று நம்பிக்கை உள்ளது. எனவே நான் மற்ற விஷயங்கள் எதிலும் கவனத்தை சிதற விடாமல் ஒலிம்பிக் போட்டிக்காக நன்றாக தயாராகி வருகிறேன். ஜப்பானை பொறுத்தமட்டில் எந்தவொரு விஷயத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நேர்த்தியாக எடுப்பார்கள். அங்கு கொரோனா பாதிப்பு குறைவாக தான் இருக்கிறது. இருப்பினும் கொரோனா பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர ஐப்பான் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனவே இந்த ஒலிம்பிக் போட்டி பாதுகாப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

தொடக்கத்தில் 14 வருடங்களாக சந்திரசேகரிடம் பயிற்சி எடுத்தேன். கடந்த 9 ஆண்டுகளாக எஸ்.ராமனிடம் பயிற்சி பெற்று வருகிறேன். சர்வதேச போட்டிகளுக்கு செல்லும் போது சென்னையில் இருந்து நேரடியாக போட்டிக்கு செல்வது தான் எனது வாடிக்கையாகும். இங்கு இருந்து செல்லும்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். என்னை பொறுத்தமட்டில் சென்னையில் இருந்து செல்வதை ராசியாக கருதுகிறேன். இங்கு தொடர்ந்து 1½ மாதம் பயிற்சி செய்து விட்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஜூலை 10 முதல் 15-ந் தேதிக்குள் கிளம்பி செல்ல திட்டமிட்டு இருக்கிறேன்.

இந்த கடினமான தருணத்தை சமாளிப்பது மனரீதியாக கடும் சவாலான விஷயமாகும். கொரோனா தொற்று நம்மை அணுகாமல் இருக்க உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதுடன் சத்தான உணவு பொருட்களை எடுத்து கொண்டால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும். அத்துடன் தகுதி படைத்தவர்கள் அனைவரும் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமானதாகும். இந்த கடினமான சூழ்நிலையில் இருந்து விடுபட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்.

இவ்வாறு சத்யன் கூறினார்.


Next Story