பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று: ராம்குமார், அங்கிதா போராடி வெற்றி; குணேஸ்வரன் வெளியேற்றம்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று: ராம்குமார், அங்கிதா போராடி வெற்றி; குணேஸ்வரன் வெளியேற்றம்
x
தினத்தந்தி 25 May 2021 10:47 PM GMT (Updated: 25 May 2021 10:47 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றின் முதல் ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார், அங்கிதா போராடி வெற்றி கண்டனர்.

ராம்குமார் போராட்டம்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூன் 13-ந்தேதி வரை பாரீஸ் நகரில் அரங்கேறுகிறது. இதையொட்டி தற்போது அங்கேயே தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்றில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் ராமநாதன், அமெரிக்காவின் மைக்கேல் மோவை எதிர்கொண்டார். முதல் செட்டை பறிகொடுத்து 2-வது செட்டிலும் பின்தங்கிய ராம்குமார், அதன் பிறகு சுதாரித்து மீண்டு டைபிரேக்கர் வரை போராடி 2-வது செட்டை வசப்படுத்தினார். கடைசி செட்டில் எதிராளியை எளிதில் அடக்கிய ராம்குமார் முடிவில் 2-6, 7-6 (7-4),6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 54 நிமிடங்கள் நீடித்தது. ராம்குமார் இன்னும் 2 சுற்றில் வெற்றி கண்டால் பிரெஞ்ச் ஓபன் பிரதான சுற்றுக்குள் கால்பதிக்க முடியும். உலக தரவரிசையில் 215-வது இடம் வகிக்கும் ராம்குமார், அடுத்து 203-ம் நிலை வீரரான டெனிஸ் இஸ்தோமினுடன் (உஸ்பெகிஸ்தான்) பலப்பரீட்சை நடத்துகிறார்.

மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 2-6, 2-6 என்ற நேர் செட்டில் ஆஸ்கர் ஓட்டியிடம் (ஜெர்மனி) தோற்று ஏமாற்றம் அளித்தார். பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு புள்ளிகளை தாரைவார்க்கும் தவறுகளை குணேஸ்வரன் எதிராளியை விட ஒரு மடங்கு அதிகமாக (32 முறை) செய்ததால் நேர் செட்டில் பணிய வேண்டியதாகி விட்டது.

இதே போல் 2016-ம் ஆண்டில் டாப்-20 இடத்திற்குள் வலம் வந்த ஆஸ்திரேலியாவின் பெர்னர்ட் தாமிக் இப்போது தரவரிசையில் 213-வது இடத்தில் இருப்பதால் தகுதி சுற்றில் ஆட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். தகுதி சுற்றின் முதல் ரவுண்டில் அவரை 16 வயதான ஆர்தர் பில்ஸ் (பிரான்ஸ்) 6-7 (5-7), 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டம் 2 மணி 20 நிமிடங்கள் நடந்தது.

அங்கிதா முன்னேற்றம்

முன்னதாக நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 182-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தனது முதல்தடையை வெற்றிகரமாக கடந்தார். 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அரினா ரோடியானோவை (ஆஸ்திரேலியா) போராடி சாய்த்த அங்கிதா அடுத்து 125-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் கிரீத் மினெனை இன்று சந்திக்கிறார்.


Next Story