சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஒசாகா, ஆஷ்லி பார்ட்டி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஒசாகா, ஆஷ்லி பார்ட்டி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 20 Aug 2021 6:41 AM GMT (Updated: 2021-08-20T12:11:15+05:30)

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் நவோமி ஒசாகா, ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

மான்பில்ஸ் 500-வது வெற்றி
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும்சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தினார். சர்வதேச போட்டியில் மான்பில்ஸ் பெற்ற 500-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 2-வது பிரான்ஸ் வீரர் என்ற பெருமையை அவர்பெற்றார்.ரஷியாவின் மெட்விடேவ், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்வாட்ஸ்மேன் (அர்ஜென்டினா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா) உள்ளிட்டோரும் வெற்றி பெற்று 3-வது சுற்றை எட்டினர்.

போபண்ணா ஜோடி தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-இவான் டோடிக் (குரோஷியா) ஜோடி 6-1, 4-6, 7-10 என்ற செட் கணக்கில் பிலிப் கிராஜ்னோவிச் (செர்பியா)-பாப்ரைஸ் மார்ட்டின் (பிரான்ஸ்) இணையிடம் போராடி தோற்று வெளியேறியது.பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்) சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க இளம் வீராங்கனையான கோகோ காப்பை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் கால் பதித்தார். இதே போல் ‘நம்பர் ஒன்’ மங்கை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் ஹீதர் வாட்சனை விரட்டினார்

ஹாலெப் விலகல்
நடப்பு சாம்பியன் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பாலா படோசா (ஸ்பெயின்), ஆன்ஸ் ஜாபர் (துனிசியா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), முகுருஜா (ஸ்பெயின்) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றியை ருசித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியதால் அவரை எதிர்த்து விளையாட இருந்த ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) போட்டியின்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)- ஆன்ஸ் ஜாபர் (துனிசியா) இணை 5-7, 2-6 என்ற நேர்செட்டில் வெரோனிகா குடெர்மிடோவா (ரஷியா)-எலினா ரைபகினா (கஜகஸ்தான்) ஜோடியிடம் வீழ்ந்து நடையை கட்டியது.

Next Story