ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ், ஹாலெப் 4-வது சுற்றுக்கு தகுதி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ், ஹாலெப் 4-வது சுற்றுக்கு தகுதி
x
தினத்தந்தி 22 Jan 2022 7:19 PM GMT (Updated: 22 Jan 2022 7:19 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ், சிமோனா ஹாலெப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-4, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் நெதர்லாந்தின் வான் டி ஜாண்ட்ஸ்கல்ப்பை விரட்டியடித்து தொடர்ந்து 4-வது முறையாக 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

4-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 7-5, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் பெனோய்ட் பேரை (பிரான்ஸ்) சாய்த்து 4-வது சுற்றை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 5-7, 6-7 (3-7), 6-3, 3-6 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் டான்கா கோவினிச்சை (மான்ட்னெக்ரோ) பந்தாடி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்ற ஆட்டங்களில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வான்ட்ரோசோவாவையும் (செக்குடியரசு), முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்வியாடெக் (போலந்து) தன்னை எதிர்த்த ரஷியாவின் டாரியா கசட்கினாவை 6-2, 6-3 என்ற நேர்செட்டிலும் வீழ்த்தினர்.

கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-ஜூராக் ஸ்கிரீபர் (குரோஷியா) இணை 6-1, 4-6, (9-11) என்ற செட் கணக்கில் லிட்மிலா கிச்னோக் (உக்ரைன்)-ஆண்ட்ரே கோலுபேவ் (கஜகஸ்தான்) ஜோடியிடம் தோல்வி கண்டு நடையை கட்டியது.


Next Story