அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ரபெல் நடால்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ரபெல் நடால்
x

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், 3-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) தொடக்க சரிவில் இருந்து மீண்டு 2-6, 6-4, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் 60-ம் நிலை வீரரான பாபி போக்னினியை (இத்தாலி) விரட்டியடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். கடைசி செட்டில் பந்தை வேகமாக திருப்ப முயற்சித்த போது, நடால் தவறுதலாக பேட்டால் மூக்கில் அடித்ததால் ரத்தம் வழிந்தது. இதனையடுத்து அவர் மைதானத்தில் சிகிச்சை பெற்று தொடர்ந்து ஆடினார். இந்த வெற்றியின் மூலம் நடால் இத்தாலியில் நவம்பர் மாதம் நடக்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று போட்டிக்கு முதல் வீரராக தகுதி பெற்றார்.

சமீபத்தில் சின்சினாட்டி ஓபனை வென்ற குரோஷிய வீரர் போர்னா கோரிச் 4-6, 6-7 (10-12), 1-6 என்ற நேர்செட்டில் ஜென்சன் புரூக்ஸ்பியிடமும் (அமெரிக்கா), போலந்து வீரர் ஹூபெர்ட் ஹர்காக்ஸ் 4-6, 6-4, 6-7 (5-7), 3-6 என்ற செட் கணக்கில் இல்யா இவாஷ்காவிடமும்(பெலாரஸ்) அதிர்ச்சி தோல்வி அடைந்து நடையை கட்டினர்.

மற்ற ஆட்டங்களில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), மரின் சிலிச் (குரோஷியா),பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), ஸ்வாட்ஸ்மேன் (அர்ஜென்டினா), கேமரூன் நோரி (இங்கிலாந்து) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

முகுருஜா அபாரம்

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-0, 6-4 என்ற நேர்செட்டில் லின்டா புருக்விர்டோவாவை (செக்குடியரசு) தெறிக்கவிட்டார். அதே சமயம் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 7-6 (7-5), 1-6, 2-6 என்ற செட் கணக்கில் 54-ம் நிலை வீராங்கனை பெட்ரா மார்டிச்சிடம் (குரோஷியா) வீழ்ந்தார்.

சபலென்கா (பெலாரஸ்), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) உள்ளிட்டோர் 2-வது சுற்று தடையை வெற்றிகரமாக கடந்தனர்.


Next Story