விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்; பரிசுத்தொகை ரூ.464 கோடி...


விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்; பரிசுத்தொகை ரூ.464 கோடி...
x

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அதிக முறை வென்ற பெடரரின் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் ஜோகோவிச் களம் இறங்குகிறார்.

லண்டன்,

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். காயம் காரணமாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் விலகி விட்டார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியனும், 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற உலக சாதனையாளருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபனில் வாகை சூடியுள்ள அவர் புல்தரை போட்டியான விம்பிள்டனிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடவையும் பட்டம் வென்றால் அதிக முறை விம்பிள்டன் கோப்பையை உச்சிமுகர்ந்தவரான முன்னாள் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் (8 முறை) சாதனையை சமன் செய்வார். தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ஜோகோவிச் முதல் சுற்றில் 67-ம் நிலை வீரர் அர்ஜென்டினாவின் பெட்ரோ காசினுடன் மோதுகிறார்.

ஜோகோவிச்சுக்கு 'நம்பர் ஒன்' இளம் புயல் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), டேனில் மெட்விடேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்ஜர் ருனே (டென்மார்க்), ரூப்லெவ் (ரஷியா), ஜானிக் சின்னெர் (இத்தாலி) உள்ளிட்டோர் கடும் சவால் அளிக்க வரிந்துகட்டுகிறார்கள். அல்காரஸ் முதல் சுற்றில் ஜெரிமி சார்டியை (பிரான்ஸ்) எதிர்கொள்கிறார். கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் இறுதிப்போட்டியில் அல்காரஸ்-ஜோகோவிச் மோதலாம்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் 'நம்பர் ஒன்' நட்சத்திரமும், பிரெஞ்சு ஓபன் சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து), 2-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்கா ( பெலாரஸ்), நடப்பு சாம்பியன் எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா, கோகா காப், மேடிசன் கீஸ் (மூன்று பேரும் அமெரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா), பெட்ரோவா, கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) உள்ளிட்டோர் முன்னணியில் ஓடுகிறார்கள்.

இதில் விம்பிள்டனில் இதுவரை 4-வது சுற்றை தாண்டிராத ஸ்வியாடெக், இந்த முறை சாதிக்கும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார். அவர் முதல் சுற்றில் 33-ம் நிலை வீராங்கனை லின் ஜூவுடன் (சீனா) மோதுகிறார். அதே சமயம் நடப்பு சாம்பியனான ரைபகினாவுக்கு தொடக்கக்கட்ட சுற்றுகள் கடினமாக அமைந்துள்ளன. அவர் முதல் ரவுண்டில் ஷெல்பி ரோஜர்சை (அமெரிக்கா) சந்திக்கிறார்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.464 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 11.2 சதவீதம் அதிகமாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.24½ கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.12¼ கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும். இரட்டையர் பிரிவில் மகுடம் சூடும் ஜோடியினர் ரூ..6¼ கோடியை பரிசாக பெறுவார்கள். முதல் சுற்றில் தோல்வியை தழுவும் வீரர், வீராங்கனைக்கு கூட ரூ.57 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் ஜோகோவிச், ஸ்வியாடெக், முன்னாள் சாம்பியன் அமெரிக்க மூத்த வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், கேஸ்பர் ரூட் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டென்னிஸ் திருவிழாவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2, செலக்ட்1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story