விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜாபியர்- வோன்ட்ரோசோவா


விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜாபியர்- வோன்ட்ரோசோவா
x

இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் (செர்பியா)- ஜானிக் சினெர் (இத்தாலி), கார்லஸ் அல்காரெஸ் (ஸ்பெயின்)- மெட்விடேவ் (ரஷியா) மோதுகிறார்கள்.

லண்டன், -

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் தரவரிசையில் 42-வது இடம் வகிக்கும் மார்கெட்டா வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) வெளியேற்றி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் 'நம்பர் ஒன்' நட்சத்திரம் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்த ஸ்விடோலினா, வோன்ட்ரோசோவாவின் சவாலை சமாளிக்க முடியாமல் பணிந்து விட்டார்.

மற்றொரு அரைஇறுதியில் 6-ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 6-7 (5-7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான சபலென்காவை (பெலாரஸ்) போராடி தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக விம்பிள்டனில் இறுதிசுற்றை எட்டினார். திரில்லிங்கான இந்த மோதல் 2 மணி 19 நிமிடங்கள் நீடித்தது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் வோன்ட்ரோசோவா- ஜாபியர் நாளை மோதுகிறார்கள். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு எந்தவித கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 5-7, 4-6 என்ற நேர் செட்டில் போட்டித்தரநிலையில் முதலிடம் வகிக்கும் வெஸ்லி கூல்ஹோப் (நெதர்லாந்து)- நியல் ஸ்கப்ஸ்கி (இங்கிலாந்து) இணையிடம் தோற்று நடையை கட்டியது. இதன் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் (செர்பியா)- ஜானிக் சினெர் (இத்தாலி), கார்லஸ் அல்காரெஸ் (ஸ்பெயின்)- மெட்விடேவ் (ரஷியா) மோதுகிறார்கள்.


Next Story