அண்ணாச்சி.. பாக்கெட் அரிசி வேண்டாம்; எடைபோட்டு தாங்க!


அண்ணாச்சி.. பாக்கெட் அரிசி வேண்டாம்; எடைபோட்டு தாங்க!
x

அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. உயர்வு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இந்த நிலையில், கடுமையான விலைவாசி உயர்வு ஒரு பக்கம் அழுத்த, வீட்டு வரி, மின்சார கட்டணம் உயர்வு, சேமிப்புகளுக்கு வட்டி குறைப்பு, போதாக்குறைக்கு பூதக்கண்ணாடி வைத்து தேடும் வருமான வரி வசூல் என்ற சூழ்நிலையில், இப்போது அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. உயர்வு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இரு மாதங்களுக்கு ஒருமுறை மத்திய நிதி மந்திரி தலைமையிலான மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடி, புது வரிகள் விதிப்பது மற்றும் வரி மாற்றங்கள் குறித்து முடிவு செய்கிறது. சமீப காலங்களாக இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூடினாலே, என்னென்ன புது வரிகள் விதிக்கப்போகிறார்களோ?, என்ன பொருட்களுக்கு வரி உயர்வு அறிவிக்கப்போகிறார்களோ? என்ற அச்சம் கலந்த எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. அதை உறுதிப்படுத்துவதுபோல, சமீபத்தில் சண்டிகாரில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், இதுவரையில் வரி இல்லாத சிலபொருட்களுக்கு புதிதாக வரி உள்பட பல பொருட்கள் சேவைகளுக்கு வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அரிசிக்கு வரி இல்லை. ஆனால், இப்போது பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் 'லேபிள்' ஒட்டப்படாத, 'பிராண்டு' இல்லாத அரிசிக்கு 5 சதவீதம் வரி உண்டு. அதிலும் 25 கிலோவுக்கு மேல் வாங்கினால் வரி கிடையாது. அன்றாடம் தேவைக்காக ஏழை-எளிய, நடுத்தர மக்கள் வாங்கும் அரிசிக்கு மட்டும் வரி உண்டாம். இனி மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதுபோல, மளிகை கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசியை வாங்க தயங்குவார்கள். சில்லரையாகத்தான் பொருட்கள் வாங்குவார்கள். கடைக்காரரிடம், "அண்ணாச்சி.. பாக்கெட்டு அரிசி வேண்டாம்; நீங்கள் தராசில் எடைபோட்டு தாருங்கள்" என்று கேட்கப்போவது உறுதி.

அரிசி மட்டுமல்ல, பருப்பு வகைகள், தானிய வகைகள், கோதுமை, மாவு, ஓட்ஸ், கேழ்வரகு, சோளம் போன்ற பல உணவு பொருட்கள், அரிசியைப்போல 25 கிலோவுக்கு குறைவான எடையில் 'பேக்' செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது 5 சதவீத வரிக்கு உட்படுத்தப்படுகிறது. இது மட்டுமல்லாமல், தேன், வெல்லம், அப்பளம் போன்ற வரியில்லாத பொருட்களுக்கும் புதிதாக 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. மேலும், பால் தவிர்த்து தயிர், மோர், லஸ்சி, நெய் போன்ற பால் பொருட்களுக்கும் 5 சதவீத வரி மக்கள் தலையில் விழுந்துள்ளது. பாலாக வாங்கினால் வரி இல்லை, ஆனால், அதில் இருந்து கிடைக்கும் தயிர், மோர், வெண்ணெய், நெய்க்கு இனி வரி என்பது எப்படி சரியாக இருக்கும்? என்பது மக்கள் கேள்வி.

இதுவரை, வரி விலக்கு பட்டியலில் இருந்த 'செக்' புத்தகங்கள், மாணவர்களுக்கான வரைபடங்கள், தேசப்படங்கள் உள்பட பல பொருட்கள், சேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. "அனைத்து மாநில நிதி மந்திரிகளின் ஒப்புதல் பேரிலேயே இந்த வரி விதிப்பு, வரி உயர்வுக்கான முடிவு செய்யப்பட்டுள்ளன" என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஆனால், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதை மறுத்து இருக்கிறார். "இந்த முடிவு தமிழ்நாடு உறுப்பினராக இல்லாத அமைச்சர் குழுவால்தான் எடுக்கப்பட்டது. உணவு பொருட்களின் மீதான வரி சாமானிய மக்களை பாதிக்கும் என்பதால், தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று உறுதியாக தெரிவித்துவிட்டது" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த மாதம் கூடும் அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், இந்த முடிவுகளையெல்லாம் மறு பரிசீலனை செய்து, ரத்து என்ற அறிவிப்பை பிறப்பிக்கவேண்டும் என்பதே மக்கள் வேண்டுகோளாக இருக்கிறது.


Next Story