இன்னொரு பொருளாதார வீழ்ச்சியா? உலகம் தாங்குமா?


இன்னொரு பொருளாதார வீழ்ச்சியா? உலகம் தாங்குமா?
x

உலகில் இன்னொரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று இண்டர்நேஷனல் மானிட்டரி பண்ட் என்று கூறப்படும் சர்வதேச நிதியம் எச்சரித்து இருக்கிறது.

உலகில் இன்னொரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று இண்டர்நேஷனல் மானிட்டரி பண்ட் என்று கூறப்படும் சர்வதேச நிதியம் எச்சரித்து இருக்கிறது. இந்தியா உள்பட உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு, அதாவது 2022-2023-ல் எப்படி இருக்கும்? என்றும், மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.2 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 2.7 சதவீதமாகவும் இருக்கும். இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று முன்பு கணித்து இருந்த சர்வதேச நிதியம், இப்போது 6.8 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. உலக வங்கி முன்பு 7.5 சதவீதம் என்று கணித்து இருந்த நிலையில், இப்போது 6.5 சதவீதம் ஆக இருக்கும் என்றும், ரிசர்வ் வங்கி முன்பு 7.2 சதவீதம் என இருக்கும் என்று கணித்து இருந்த நிலையில், இப்போது 7 சதவீதமாக குறையும் எனவும் மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் நிலை பரவாயில்லை. அமெரிக்காவில் 2021-ம் நிதி ஆண்டில் 5.7 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2022-ம் நிதி ஆண்டில் 1.6 சதவீதமாக குறைந்து 2023-ம் நிதி ஆண்டில் ஒரு சதவீதமாக குறையும் என்றும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2021-ம் ஆண்டில் 8.1 சதவீதமாக இருந்த நிலை மளமளவென்று சரிந்து 2022-ம் ஆண்டில் 3.2 சதவீதமாகிவிட்டது. 2023-ல் 5.7 சதவீதமாக உயரும் என கூறப்படுகிறது. அமெரிக்கா, சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி குறைவால் இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

உலக நாடுகளின் இந்த நிலைக்கு காரணம் ரஷியா-உக்ரைன் போர், உலகளாவிய நிலையில் உள்ள விலைவாசி உயர்வினால் வாழ்க்கை செலவு உயர்வு, சீனாவின் மந்தநிலை ஆகியவையும்தான் என்று கூறுகிறது சர்வதேச நிதியம். மிகவும் மோசமான நிலை இன்னும் வர இருக்கிறது என்று எச்சரித்துள்ள சர்வதேச நிதியம் அடுத்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் அச்சத்தையும் குறிப்பிட்டுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள நிலை குறித்து, சென்னையில் உள்ள பொருளாதார விமர்சகர் வ.நாகப்பன் கூறும்போது, "சர்வதேச பொருளாதார நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இங்கிலாந்து உள்பட வளர்ந்த நாடுகளிலும் பொருளாதார தேக்கநிலை தொடங்கியுள்ளது. இதன் பாதிப்பு உலகளவில் தொடங்கிவிட்டது.

2008-ம் ஆண்டு சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தபோது, இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படவில்லை. அந்தப்போக்கு இப்போதும் தொடர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சர்வதேச பொருளாதார தேக்கநிலையின் தாக்கம் நிச்சயம் இல்லாமல் போகாது. இதை அடுத்த சில ஆண்டுகளில் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதைப் பொறுத்தே பொருளாதார நிலையும் இருக்கும், நாட்டில் வளர்ச்சியும் இருக்கும், வேலைவாய்ப்பு, உற்பத்தி வளர்ச்சியும் இருக்கும்" என்கிறார். அவர் கூறுவது நூற்றுக்கு நூறு சரிதான். 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.

அமெரிக்காவில் வங்கிகள் மிக தாராளமாக வீட்டு கடன்களை வழங்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பல விளைவுகள் காரணமாக அங்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஆக்டோபஸ்சின் கரங்கள் நீள்வதைப்போல உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் மத்திய நிதி மந்திரியாக இருந்த பொருளாதார நிபுணரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு நிறுவனங்களுக்கு அளித்த வரிச்சலுகை உள்பட எடுத்த பல நடவடிக்கைகள் பெரும் பாதிப்பில் இருந்து காப்பாற்றியது. அதுபோன்ற நடவடிக்கைகளை இப்போதும் எடுத்தால், இதுவும் கடந்து போகும்.


Next Story