2-வது முறையாக தி.மு.க. தலைவரானார் மு.க.ஸ்டாலின்!


2-வது முறையாக தி.மு.க. தலைவரானார் மு.க.ஸ்டாலின்!
x

தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வரலாறு என்பது அரசியல் உலகில் அனைவராலும் ஆச்சரியத்துடன் உற்று நோக்கப்படுகிற ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வரலாறு என்பது அரசியல் உலகில் அனைவராலும் ஆச்சரியத்துடன் உற்று நோக்கப்படுகிற ஒன்றாகும். 1949-ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் கொட்டும் மழையில் தொடங்கப்பட்ட தி.மு.க.வின் பயணம், ரோஜா இதழ்களால் தூவப்பட்ட மலர் பாதையின் மீது நடந்த பயணம் அல்ல. கல்லும், முள்ளும் காலைக் கிழிக்க ரத்தம் ஒழுக.. ஒழுக.., பல வலிகளை தாங்கி லட்சியத்தை நோக்கி வீறுநடை கொண்ட பயணமாகும். திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்தாலும், தி.மு.க.வை தொடங்கிய அண்ணாவும், தொடர்ந்து வழிநடத்திய கருணாநிதியும், இப்போது வழிநடத்தும் மு.க.ஸ்டாலினும், ஏன் அடிமட்ட தொண்டர்கள் வரை எல்லோருமே பெரியாரை நெஞ்சில்வைத்து போற்றினார்கள். இப்போதும் போற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க.வை தொடங்கிய பிறகு பெரியாருக்கான பதவி என்று, தலைவர் பதவியில் யாரையும் நியமிக்காமல் அண்ணா காலியாகவே வைத்திருந்தார். அண்ணா பொதுச்செயலாளராகவே இருந்தார். அண்ணா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையிலும், இனி பெரியார் தி.மு.க.வின் தலைவர் பொறுப்பை ஏற்க வாய்ப்பு இல்லை என்ற நிலையிலும், கருணாநிதி தி.மு.க. தலைவர் பொறுப்பை ஏற்கும் வகையில், 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி நடந்த 4-வது பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார். தன் இறுதிகாலம் வரை கருணாநிதி 11 முறை பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தி.மு.க.வை பல ஏற்ற, இறக்க சூழ்நிலைகளிலும் திறம்பட நடத்திசென்றார். நெருக்கடி நிலையின்போதும், எம்.ஜி.ஆர். பிரிந்து சென்ற நேரத்திலும், தி.மு.க.வை கட்டுக்கோப்பாக வைத்திருந்த பெருமை அவரையே சாரும்.

இந்தநிலையில், 3-1-2013 அன்று வேலூர் மேற்கு மாவட்டத்தில் இருந்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.கவில் இணைந்த நிகழ்ச்சியில் ஒரு கருத்தை கருணாநிதி சொன்னார். "இந்த சமுதாய மேன்மைக்காக, எழுச்சிக்காக நான் என் ஆயுள் இருக்கிறவரை பாடுபடுவேன். அப்படியானால், அதற்கு பிறகு என்ற கேள்விக்கு பதில்தான்-இங்கே அமர்ந்திருக்கிற ஸ்டாலின்தான் என்பதை மறந்துவிடக்கூடாது" என்று அரசியல் உயிலாக பிரகடனம் செய்தார். இதன் தொடர்ச்சியாக 4-1-2017 அன்று தி.மு.க.வின் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. தலைவர் பதவி விலகினாலோ, நீண்ட நாட்கள் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டாலோ தி.மு.க.வின் பொதுக்குழு, செயல் தலைவராக ஒருவரை நியமிக்கலாம். இந்த சட்ட திருத்தத்தின்படி தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் கொண்டு செயல் தலைவர் பணியாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது. அவ்வாறு மு.க.ஸ்டாலின், தலைவராக கருணாநிதி இருக்கும்போதே செயல் தலைவரானார்.

கருணாநிதி காலமான பிறகு நடந்த பொதுக்குழுவில், தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அவர் தலைவராக ஆற்றிய திறமைமிகு பணிகளாலும், கடும் உழைப்பாலும், தமிழ்நாடு முழுவதும் அயராது மேற்கொண்ட சுற்றுப்பயணங்களாலும், அவரது தீவிர பிரசாரத்தாலும், தி.மு.க. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். நேற்று நடந்த பொதுக்குழுவில் 2-வது முறையாக தி.மு.க. தலைவராக ஒருமனதாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மு.க.ஸ்டாலின் இந்த பதவிக்கு சும்மா வந்துவிடவில்லை. 14 வயதிலேயே தோளில் தி.மு.க. கொடியை சுமந்து பிரசாரம் செய்து, தன் அரசியல் பயணத்தை தொடங்கினார். நெருக்கடி நிலையின்போது சிறையில் பல சித்ரவதைகளுக்கு ஆளானார். ஒரு தொண்டனாக ஆரம்பித்து ஒவ்வொரு பதவிகளாக பெற்று, இப்போது 2-வது முறையாக தலைவராகியுள்ளார். கவிஞர் தமிழ்தாசன் கூறியது போல, பலர் வரலாற்றை உருப்போடுவார்கள், ஆனால் ஒரு சிலர்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அந்த ஒரு சிலரில் உன்னதமான இடத்தை தி.மு.க. தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அலங்கரித்துள்ளார்.


Next Story