சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் ஜனாதிபதி திரவுபதி முர்மு!


சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் ஜனாதிபதி திரவுபதி முர்மு!
x

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்கிறார்.

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்கிறார். இதற்கான தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு, அரசியல் நோக்கர்கள் எல்லோருடைய கணக்குகளையும் மீறி, 64.03 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில், முதலில் வேட்பாளர் யார்? என்பதிலேயே பெரிய குழப்பம் இருந்தது. சரத் பவார், பரூக் அப்துல்லா, கோபால கிருஷ்ண காந்தி ஆகிய மூவருமே இந்த தேர்தலில் நிற்க மறுத்துவிட்ட நிலையில், 4-வதாக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா முன்னிறுத்தப்பட்டார். திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்கா இருவருமே அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஓட்டு வேட்டையாடினார்கள். ஓட்டு எண்ணிக்கையை பார்க்கும்போது, ஓட்டு மதிப்பில் ஏறத்தாழ, 20 ஆயிரம் ஓட்டு மதிப்புகள் மெஜாரிட்டிக்கான 50 சதவீத இலக்கை தாண்டுவதற்கு தேவை என்ற நிலையில் இருந்த முர்மு, அந்த கணக்கை தாண்டி 540 எம்.பி.க்கள் உள்பட 2,824 எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றார்.

யஷ்வந்த் சின்காவுக்கு 208 எம்.பி.க்கள் உள்பட 1,877 எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்திருந்தது. எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து 17 எம்.பி.க்கள், 126 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி முர்முவுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். யஷ்வந்த் சின்காவுக்கு மேற்கு வங்காளம், தமிழ்நாட்டில் மட்டுமே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தம் 4 சுற்று வாக்கு எண்ணிக்கையில், 3-வது சுற்றிலேயே முர்மு 50 சதவீத ஓட்டுகளுக்கு மேல் பெற்று, ஜனாதிபதி இவர்தான் என்பதை உறுதிப்படுத்தினார். ஆந்திரா, நாகலாந்து, சிக்கிம் மாநிலங்களில் 100 சதவீத வாக்குகள் முர்முவுக்கு கிடைத்துள்ளன. 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த உடனேயே பிரதமர் நரேந்திரமோடி, முர்மு வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.

முர்மு சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுகிறார். இதுவரை பதவி வகித்த ஜனாதிபதிகளிலேயே 64 வயதான முர்முதான் இளையவர். பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி. இதுவரை இருந்த ஜனாதிபதிகளில், பிரதீபா பாட்டீலுக்கு பிறகு பதவி வகிக்கப்போகும் 2-வது பெண் ஜனாதிபதி. எல்லாவற்றையும்விட சிறப்பு, 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை தொடங்கி வைக்கப்போகும் ஜனாதிபதி இவர்தான்.

இப்படி, பல பெருமைகளை தன்னகத்தே வைத்திருக்கும் முர்மு, வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களை தாண்டி வந்தவர். அரசியலிலும், கவுன்சிலர் பதவியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், கவர்னர் என்று ஒவ்வொரு படியாக ஏறிவந்த முர்மு, வாழ்க்கையில் பல இழப்புகளை சந்தித்தவர். 2 மகன்களையும், கணவரையும் இழந்த நிலையில், ஒரு மகள் மட்டும் அவருக்கு இருக்கிறார். ஜார்கண்ட் கவர்னராக அவர் இருந்தபோது, வெறும் "ரப்பர் ஸ்டாம்ப்" கவர்னராக இருந்ததில்லை. ரகுபார் தாஸ் அரசு நிறைவேற்றிய 2 குத்தகை திருத்த சட்டங்களை திருப்பி அனுப்பி, எல்லோரையும் உற்று நோக்க வைத்தார்.

"130 கோடி இந்தியர்கள் சுதந்திர தின அமிர்த பெருவிழாவை கொண்டாடும் இந்த நேரத்தில், இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள மூலையில் பிறந்த முர்மு, பல போராட்டங்களுக்கு மத்தியில், வளமான சேவையாற்றி பெற்றுள்ள வெற்றிகள், இந்தியாவில் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தும். இந்திய மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, ஏழை, ஒடுக்கப்பட்ட, நலிந்த பிரிவினருக்கு அவர் ஒரு நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக விளங்குகிறார்" என்று பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார்.

வாழ்க்கையில் வெற்றிகள், இழப்புகள் எல்லாவற்றையும் சந்தித்த ஜனாதிபதி முர்மு, அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவை வளமான பாதையில் எடுத்துச் செல்வார் என்பதில் ஐயமில்லை. அவரது வாழ்க்கையும், அவர் கடந்து வந்த பாதையும் நிச்சயமாக பெண்கள், ஏழை, எளிய நலிந்த பிரிவினருக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.


Next Story