'நீட்' தேர்வில் ஜொலிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவர்கள்


நீட் தேர்வில் ஜொலிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவர்கள்
x

அரசு பள்ளிக்கூட மாணவர்களால் எதுவும் முடியும் என்பது மருத்துவப்படிப்புக்கான தரவரிசை பட்டியலில் இருந்து தெள்ளத்தெளிவாக தெரிய வந்திருக்கிறது.

அரசு பள்ளிக்கூட மாணவர்களால் எதுவும் முடியும் என்பது மருத்துவப்படிப்புக்கான தரவரிசை பட்டியலில் இருந்து தெள்ளத்தெளிவாக தெரிய வந்திருக்கிறது. தொடக்கத்திலேயே தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்தது. இன்றும் எதிர்த்து வருகிறது. ஆனால் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி, நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுவிட்டது. நீட் விலக்குக்கு தொடர்ந்து முயற்சிப்போம். அதுவரையில் நீட் தேர்வை எழுதித்தான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில், 2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தப்பட்டு, அதன் மூலம் மாணவர் சேர்க்கையும் நடக்கிறது. இந்த ஆண்டு அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 8,225 எம்.பி.பி.எஸ். இடங்களும், 2,150 பி.டி.எஸ். இடங்களும் இருக்கின்றன. கடந்த ஆண்டு மருத்துவப்படிப்புக்கு 24 ஆயிரத்து 951 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு 22 ஆயிரத்து 736 பேர்தான் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு தரவரிசை பட்டியலின்படி, முதல் இடத்தை பெற்றவர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.திரிதேவ் விநாயகா. இவர் 720-க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார். இதுபோல 700 மதிப்பெண்ணுக்கு மேல் 5 மாணவர்கள் பெற்றிருக்கின்றனர். முதல் 10 இடங்களை பெற்றவர்களில் 7 பேர் மாணவர்கள், 3 பேர் மாணவிகள் ஆவர்.

ஆரம்பகாலங்களில் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களின் நீட் தேர்வு தேர்ச்சி சதவீதம் வெகுகுறைவாக இருந்த காரணத்தால், மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில்தான் இருந்தது. இந்தநிலையை போக்க, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது அரசு பள்ளிக்கூடங்களில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, இந்த இடஒதுக்கீட்டை அனைத்து தொழிற்கல்வி உள்பட உயர்படிப்புகளுக்கும் அறிமுகப்படுத்தினார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டினால், மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேரும் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. கடந்த ஆண்டு 445 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 110 பேர் பி.டி.எஸ். படிப்பிலும் இந்த இடஒதுக்கீட்டின்கீழ் கல்லூரிகளில் சேர்ந்தனர். இந்த ஆண்டு 565 பேர் மருத்துவப்படிப்புகளில் சேர உள்ளனர்.

மொத்த இடங்களுக்கான விண்ணப்பங்கள் குறைந்திருந்தாலும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்திருந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,950 ஆக இருந்தநிலையில், இந்த ஆண்டு 2,674 ஆக உயர்ந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. 2 ஆயிரத்து 674 பேரில், 764 பேர் மாணவர்கள், 1,910 பேர் மாணவிகள். இவர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடத்தில் 6 மாணவர்கள், 4 மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். இதில் முதல் மதிப்பெண் எடுத்த தேவதர்ஷினியின் தாயார் அங்கன்வாடி பணியாளர். 2-வது மதிப்பெண் பெற்ற சுந்தர்ராஜன் சென்னை குரோம்பேட்டையிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். இவர் எந்த பயிற்சி வகுப்பிலும் சேரவில்லை. தானாகவே படித்து, நீட் தேர்வில் இந்த இடத்தை பெற்றுள்ளார். அரசு பள்ளிக்கூடங்களில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெற்று, மருத்துவக்கல்லூரிகளில் சேரும் பெரும்பாலானோர் மிக சாதாரண குடும்பத்திலிருந்து வந்திருப்பவர்களாகவே உள்ளனர்.

கடந்த ஆண்டைவிட 'நீட்' தேர்வில் மாணவர்கள் இந்த ஆண்டு குறைந்தளவு மதிப்பெண் பெற்றிருப்பதால், பொதுப்பிரிவு மற்றும் இதர பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 5 முதல் 15 மதிப்பெண் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதேநேரத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இருக்கும் இடங்களைவிட அதிகம்பேர் முட்டிமோதுவதால், அதற்கு கட்-ஆப் மதிப்பெண்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பள்ளிக்கூடங்களில் 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை இன்னும் நல்லமுறையில் நடத்தினால், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடம்பெறும் மாணவர்கள், மற்ற மாணவர்களுக்கு இணையாக உயர்படிப்பில் நிச்சயமாக சேரமுடியும். அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு நல்ல திறமை இருக்கிறது. அதை ஊக்குவிக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கூட கல்வித்துறைக்கும் உள்ளது.


Next Story